Tuesday 27 August 2013

பகவத் கீதையின் அமைப்பு முறை

பகவத் கீதையின் அமைப்பு முறை

       இராமாயணம் மகாபாரதம் இரண்டும் இந்தியர்களும் இந்துக்களும் உலகம் முழுவதும் போற்றும் இரு பெரும் இதிகாசங்கள்இவ்விரு இதிகாசங்களும் கதை வடிவிலே மனிதனின் அத்தனை குணாதிசியங்களையும் எடுத்துக்காட்டி மனிதனாய்ப் பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் எப்படி வாழக் கூடாது என்பதை எடுத்துக் கூறி நல்லறத்தை புரிய வைக்கின்றனஅந்தக் காலம் முதல் அறிவியல் விஞ்ஞானம் முன்னேறிய இந்தக் காலம் வரையிலும் அத்தகைய குணங்களையே ஒவ்வொரு மனிதனும் பிரதிபலிக்கிறான்அதன் பலன்களையும் அனுபவிக்கிறான்.

            இந்த இரு இதிகாசங்களிலே மகாபாரதம், முக்கியமாக மனிதனின் பல்வேறு மனப்போராட்டங்களை பல்வேறு பாத்திரங்கள் மூலம் தெள்ளத் தெளிவாய் விளக்குகிறதுஅத்தகைய போராட்டங்களைப் பலவிதச் சூழல்களில் சித்தரித்து விட்டு இறுதியில் அந்தப் போராட்டங்களை எப்படி நம் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பதை கண்ணபிரானின் வாய்மொழி மூலமாய், கீதோபதேசத்தின் மூலமாய்த் தெளிவுபடுத்துகிறது.

              இன்று உலகிலே எங்கு நோக்கிலும் சச்சரவுகள், சண்டைகள், போர்கள்இதற்கு வித்திடுவது என்னமனித உரிமைஉரிமை பறிக்கப்படும் போது போராட்டம் துளிர்க்கிறதுபோராட்டம் வலுக்கும் போது வெடிக்கிறதுஇத்தகைய உரிமைப் போராட்டம் ஆண்டாண்டு காலமாய்த் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்பதற்கு சான்றாய் விளங்குவதே மகாபாரதம்இந்த உரிமைக்கான போராட்டத்தின் உச்ச கட்டம் தான் குருச்சேத்திரப் போர்.

     தந்தைக்கு உதவி செய்ய பிரம்மச்சரியத்தை மேற்கொண்ட பீஷ்மரிடமிருந்து தொடங்கி, அவருக்கு அடுத்து வந்த திருதராட்டிர மன்னனும் அவனது நூறு மகன்களும் பாண்டுவும் அவனது ஐந்து மகன்களும் கொண்ட வம்சத்தின் கதையே மகாபாரதம்நூறு மகன்களுக்கும் ஐந்து மகர்க்கும் இடையே நடைபெறும் போராட்டம், உரிமைப் போராட்டம் தான் கீதையில் சித்தரிக்கப்படுகிறதுசொந்தமே என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று உணர்த்தும் கௌரவர்களின் குணாதிசயங்கள் ஒரு புறம்உறவுக்காக உயிரையும் துறக்கத் துணியும் பாண்டவர்களின் குணாதிசயங்கள் மறுபுறம்பாசத்தாலும் பரிவாலும் பரிதவிக்கும் மூத்தோர்களும் குருமார்களும் ஒரு புறம்.  இரு மாறுபட்ட குணங்களின் தன்மையையும் அதனால் விளையும் நன்மை தீமைகளையும் கீதை எடுத்துரைக்கிறது.
       
     குருச்சேத்திரத்தில் கௌரவர் படைகளும் பாண்டவர் படைகளும் போரிட ஆயத்தமாய் அணிவகுத்து நிற்கின்றன.

  அஸ்தினாபுரத்தில் அரண்மனை முற்றத்தில் துரியோதனனின் தந்தை திருதராட்டிர மன்னன் அமர்ந்துள்ளார். அவர் கண்பார்வையற்றவர். அருகில் அமைச்சர் சஞ்சயன் இருக்கிறார்.

    அப்போது வியாச முனிவர் அங்கே தோன்றி, “திருதராட்டிரா... குருச்சேத்திரப் போரைப் பார்க்க விரும்பினால்... உனக்கு ஞான திருஷ்டி தருகிறேன்!” என்றார்.

            “உறவினர்கள் கொல்லப்படுவதை நான் காண விரும்பவில்லைஎன்ற திருதராட்டிரன், “இருந்தாலும், போரின் தன்மையை அறிய விரும்புகிறேன்என்றார்.

            “அப்படியானால் இதோ.. இந்த அமைச்சர் சஞ்சயனுக்கு ஞானதிருஷ்டி அளிக்கிறேன்! இவன் உனக்குப் போர்க்கள நிகழ்ச்சிகளை அப்படியே கூறுவான்!“ என்று அருகில் அமர்ந்திருந்த அமைச்சர் சஞ்சயனுக்கு ஞானக்கண் அருளிவிட்டு வியாச முனிவர் மறைந்து போனார்.

            பிறகு அமைச்சர் சஞ்சயன் போர்க்கள நிகழ்ச்சிகளை ஞானக்கண்ணால் கண்டு, மன்னவன் திருதராட்டிரனுக்கு விளக்கிக் கூறுகிறார். (வாரியார் சுவாமிகளின் ஸ்ரீமகாபாரதம் - பக்கம். 303 - 305தில் இப்படி கூறப்படுகிறது. )

            இவ்விதம் அமைச்சர் சஞ்சயன் விளக்கும் வகையில்தான் பகவத் கீதை அமைந்து, பதினெட்டாம் அத்தியாயத்தின் இறுதியில் அவர் வாய்மொழி மூலமாகவே நிறைவெய்துகிறது.

            அமைப்பு முறையில் எடுத்துக் கொண்டால் இது ஓர் அற்புதமான உத்தி என்று தான் சொல்ல வேண்டும்.

            இடைப்பட்ட அத்தியாயங்களில் பல இடங்களில் அமைச்சர் சஞ்சயன் பேசுகிறார். இவ்விதம் அவர் பேசுவதெல்லாம், தெளிவு கருதி, இப்புதிய மொழிபெயர்ப்பில் அடைப்புக் குறிக்குள் தரப்பெற்றுள்ளன.

            இதையே உரையாசிரியர் பேரரறிஞர் அண்ணா ஸ்ரீமத் பகவத் கீதை, பக்கம்  4கில் கீழ்கண்டவாறு விவரித்துள்ளார்.


            “பத்தாவது நாள் போரில் பீஷ்மர் தேரினின்றும் வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் சயனித்து மரணத்தை எதிர் நோக்கியிருந்தார். இச்செய்தியை அமைச்சர் சஞ்சயன், மன்னவன் திருதராட்டிரனிடம் கூறிய போது, மன்னவன் மிகவும் துக்கித்து, யுத்தச் செய்திகளை விவரமாய் வர்ணிக்கும்படிக் கேட்டான். வியாசருடைய அருளால் தூரத்தில் நடப்பவற்றை மனக்கண்ணில் காணும் சக்தி பெற்றிருந்த அமைச்சர் சஞ்சயன் போர் ஆரம்பித்தது முதல் வர்ணிக்கத் தொடங்கினான்!”