Tuesday, 27 August 2013

1. அர்ஜுன விஷாத யோகம்அர்ஜுன விஷாத யோகம்


  விஷாதம் என்றால் துயரம். அர்ஜுனன் துயரமடையும் பகுதி இது. குருச்சேத்திரத்தில் கௌரவர்களும் பாண்டவர்களும் போர் புரிய, நால்வகைப் படைகளுடன் அணிவகுத்து நிற்கின்றனர். பாண்டவர்களில் ஒருவனான அர்ஜுனன் எதிரிப்படையை நோட்டம் விடுகிறான். எதிரிகள் அனைவருமே அவனது உற்றார் உறவினர்களாயும், ஆசிரியன்மார்களாயும் இருக்கக் கண்டு உயிரினும் இனிய அவர்களைக் கொல்லுவதா என்று துயரம் மிகுந்தவனாய் வில்லையும் அம்பையும் வீசி எறிகிறான். இந்நிகழ்ச்சிகள் இதில் விளக்கப் பெறுகின்றன.

       இதில் 46 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

-------
     
 (அத்தினாபுர அரண்மனை முற்றத்தில் திருதராட்டிர மன்னவன் அமர்ந்திருக்க, அமைச்சர் சஞ்சயன் அருகில் இருக்கிறார்.)

திருதராட்டிரன்: சஞ்சயா! குருச்சேத்திரத்தில் போர் செய்யத் திரண்ட என் மைந்தர்களும் பாண்டவர்களும் என்ன தான்  செய்தார்கள்?

அமைச்சர் சஞ்சயன்: மாமன்னவரே! இதோ... தங்கள் மைந்தன் துரியோதனன் அணிவகுத்து நிற்கும் பாண்டவர் படையைப் பார்த்த பின்பு, குருதேவர் துரோணாச்சாரியாரிடம் செல்கிறார்.. இவ்வாறு சொல்லுகிறார்.                                                                                             
(என்று அமைச்சர் சஞ்சயன் ஆரம்பித்து வைக்க குருச்சேத்திர யுத்தகளத்திற்குக் காட்சி மாறுகிறது.)

துரியோதனன்: குருதேவரே! தங்களது சீடனும் துருபதன் மகனுமான  திருஷ்டத்யுமனன் அணிவகுத்திருக்கும் அதோ.. அந்தப் பெரிய பாண்டவ சேனையைப் பாருங்கள்! அங்கே வீராதி வீரர்களும் விற்போர் வித்தகர்களும் இருக்கிறார்கள். விராடன், துருபதன், வீரமிக்க காசிராஜன்.. யுயுதானன், சேகிதானன், குந்திபோஜன், சைவியன்.. அபிமன்யு, யுதாமன்யூ, உத்தமவுஜா, புருஜித்து.. திருஷ்டகேது மற்றும் திரௌபதி மைந்தர்களான உப பாண்டவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருமே மகாரதர்கள். பிராமண குல திலகமே.. இப்போது நமது படைப் பெருமை கூறுவேன்! நமது தளநாயகர் வரிசையை நினைவு கூறுவேன்! தாங்களும் பீஷ்மரும், கர்ணனும், கிருபரும், விகர்ணனும், அச்வத்தாமனும், சோமதத்தன் மகன் பூரிசிரவசும் இருக்கிறீர்கள்! மேலும் எனக்காக உயிரும் கொடுக்கத் துணிந்த சூரர்கள் பலர் இருக்கிறார்கள்! அத்தனை பேருமே போரிலே வல்லவர்கள்.. பற்பல ஆயுதம் உள்ளவர்கள்பீஷ்மரால் காக்கப்படும் நமது சேனை அளவுகடந்து அலை மோதுகிறது. பீமனால் காக்கப்படும் பாண்டவர் படையோ அளவுக்கு உட்பட்டு நிற்கிறது. (வீரர்கள் பக்கம் திரும்பி) , சேனா வீரர்களே! அவரவர்குரிய இடத்திலிருந்து கொண்டு நமது பீஷ்மரைக் காத்து நின்று போர் புரியுங்கள்!

 (இவ்விதம் கூறிய துரியோதனனுக்கு உற்சாகம் தோன்றும் படியாய், குருவம்சப் பெருவீரர் பீஷ்மர் சிம்மம் போல் கர்ஜித்து, சங்கை ஊதினார். உடனே சங்குகளும் பேரிகைகளும், பறைகளும் கொம்புகளும் மற்றும் தம்பட்டங்களும் முழங்கப் பேரொலி எழுந்தது.

            பாண்டவர் படையில் வெள்ளைக் குதிரைகள் பூட்டி.. கொள்ளை அழகு காட்டி ஓர் இரதம் நின்றது. அதில் சாரதியாய் அமர்ந்திருந்த கண்ணன் பாஞ்சஜன்யம் என்ற தெய்வீக சங்கை ஊதினார். அருகிலிருந்த அர்ஜுனன் தேவதத்தம் என்ற சங்கை நாதித்தான்பீமசேனன்  பவுண்டரம் என்ற பெரிய சங்கை ஒலித்தான்தருமன் அனந்தவிஜயம் என்ற சங்கையும், நகுலனும் சகாதேவனும் முறையே சுகோஷம், மணிபுஷ்பகம் என்ற சங்குகளையும்  ஊதினார்கள். மற்றும் காசிராஜன், சிகண்டி, திருஷ்டத்யுமனன், விராடன், சாத்யகி, துருபதன், திரௌபதி மைந்தர்களான உப பாண்டவர்கள், அபிமன்யு ஆகிய அனைவரும் தனித்தனியே தத்தம் சங்குகளை முழக்கினார்கள். இந்தப் பெருமுழக்கம் வானை அதிரடித்தது... மண்ணில் எதிரொலித்தது... துரியோதனாதியர் கூட்டத்தைக் கதிகலங்க வைத்தது.   

            போர் துவங்கும் இந்த நேரத்தில் காண்டீபமும் கையுமாய் நின்ற அனுமக்கொடி அர்ஜுனன், ஹிருஷிகேசனான கண்ணனிடம் சொல்லுகிறான்.)           

அர்ஜுனன்: அச்சுதா! இரு படைகளுக்கும் நடுவே என் தேரை நிறுத்துக! போரிலே ஆசை கொண்டு நிற்கும் வீரர்களை நான் பார்க்க வேண்டும். துன்மதி படைத்த துரியோதனனுக்காகப் போரிட வந்துள்ளவர்களை நான் காண வேண்டும்.

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா! அணி திரண்டு நிற்கும் கௌரவர்களை நீ பார்க்கலாம்!                                                                     

(என்றவாறு பரந்தாமன் அழகிய தன் சிறந்த ரதத்தைப் படை நடுவே நிறுத்தினார். அர்ஜுனன் கண்களை மலர்த்தி இருபுறமும் பார்த்தான். எதிரில் தந்தையர் நின்றனர்! பாட்டன்மார் நின்றனர்! ஆச்சாரியரும் அண்ணன் தம்பியரும் நின்றனர்! மக்களும் மாமன்மாரும் நின்றனர்! தோழரும் பேரன்மாரும் நின்றனர்! இதைப் பார்த்த அர்ஜுனன் குமுறும் துயரத்துடன் கண்ணனைப் பார்த்துச் சொல்லுகிறான்.)                       

அர்ஜுனன்: கண்ணா! இவர்களுடனா நான் போர் செய்ய வேண்டும்? என் உடல் சோர்வடைகின்றதே! வாய் வறள்கின்றதே! நடுக்கமும் மயிர்க்கூச்சமும் எழுகின்றதே! கையிலிருந்து காண்டீபம் நழுவுகின்றதே! மேலும் தோலும் பற்றி எரிகின்றதே! மனது சுழல்கின்றதே!  என்னால் நிற்கவும் முடியவில்லையே!          

            கேசவா! கெட்ட சகுணம் தோன்றுகின்றதே! ஆச்சாரியர்களும் பாட்டன்மார்களும் தகப்பன்மார்களும்.. பேரன்மார்களும் பிள்ளைச் செல்வங்களும்.. மாமன்மார்களும் மாமனார்களும்..   சம்பந்திகளும் மைத்துனர்களும் என் எதிரில் நிற்கிறார்களே! இச்சுற்றத்தைக் கொன்று, கொற்றத்தை வென்றிட நான் விரும்பவில்லை! அதில் எந்த நன்மையும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை! ராஜ்யம், ரம்மிய சுகவாழ்வு இவற்றில் பயன் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை! அரச போகம் எதற்காக? ஆசாரியர்களும் அன்பான உறவினர்களும் அக மகிழ்வதற்காக! அத்தனை பேரும், இதோ.. உயிரையும் துறக்கச் சித்தமாய் யுத்த பூமியில் நிற்கிறார்களே!  இவர்களைக் கொன்றா இன்பம் அனுபவிப்பது?

    மதுசூதனா!  நான் கொல்லப்பட்டாலும் கவலை இல்லை... இவர்களை கொல்ல நான் விரும்பவில்லை! மூவுலகுமே பரிசாய்க் கிடைத்தாலும் சரி.. முன் நிற்கும் இவர்களை நான் கொல்ல மாட்டேன். மேலும் கொடும் பாவிகளான கௌரவர்களைக் கொல்லுவதால் பாவமே வந்து சேரும். சுற்றத்தை அழித்துவிட்டு சுகத்தைப் பெற்றிட முடியுமா?   குல நாசத்தாலும், மித்திர துரோகத்தாலும் விளையும் கேடுகளை, ஆசை மிகுதியால் அறிவிழந்த இவர்கள் உணராவிட்டாலும், அதை உணர்ந்த நாம், அந்தப் பழி பாவத்திலிருந்து ஏன் விலகிக் கொள்ளக் கூடாது!           

             ஜனார்தனா! குலம் அழிந்தால் குலதர்மம் வீழும்! அதர்மம் சூழும்! அதர்மத்தின் மிகுதியால் மாதர் கற்பு கெடும்! இது வர்ணக் கலப்பில் கொண்டு போய்விடும்இதனால் ஜாதி தர்மங்களும் குலதர்மங்களும் நிலைகுலையும்இதற்குக் காரணமானவர்களுக்கும் அவர்களின் சந்ததியார்களுக்கும் நிச்சயம் நரகமே ஏற்படும்! அவர்களின் பித்ருக்கள் சோறும் நீரும் இழந்து வீழ்ச்சியடைவார்கள். குலதர்மத்தை இழந்தவர்கள் நரகத்தில் வீழ்வார்கள்! அதனால் சுற்றத்தைக் கொல்லுவது பாவம்அதை நான் செய்ய மாட்டேன். ஆயுதமின்றி இருக்கும் என்னை அவர்கள் கொல்லட்டும்அதுவே எனக்குப் பெரும் பாக்கியம்!                                 

(இவ்விதம் கூறிய அர்ஜுனன் வில்லையும் அம்பையும் வீசி எறிந்து விட்டு, துயரம் மிகுந்தவனாய் இரதத்தின் பீடத்தில் அமர்ந்து விட்டான்.)


(முதல் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment