Tuesday 27 August 2013

13. க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்



க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்




சேத்ரம் என்பது உடல்! சேத்ரக்ஞன் என்பது உயிர்! உடல், இயற்கை, ஆத்மா, பரம்பொருள் ஆகியவற்றின் தன்மைகள் விளக்கப்படுகின்றன.

இதில் 35 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

--------------

அர்ஜுனன்: கேசவா! சேத்திரம் என்பது எது? சேத்ரக்ஞன் என்பது எது?

கண்ணன்: உடல் தான் சேத்திரம் என்பது! அதில் இயங்கும் அந்த உயிர்தான் சேத்ரக்ஞன்! எல்லா உடல்களிலும் இயங்கும் அந்த உயிர் நான்தான் என்பதை அறிக!

அர்ஜுனன்:     அந்த உடல் என்பது என்ன? அது எப்படிப்பட்டது? எத்தகைய மாறுதல்களை அடையக் கூடியது? எங்கிருந்து தோன்றியது? உயிர் என்பது எது? அதன் மகிமை என்ன?

கண்ணன்: சுருங்கச் சொல்லுகிறேன் கேள் அர்ஜுனா! மகாபூதங்கள் ஐந்து, உணர்வுகள் பத்து, மனம் ஒன்று, இந்திரிய சுகங்கள் ஐந்து, இயற்கை மூலம், அறிவு, அகங்காரம், விருப்பு, வெறுப்பு, சுகம், துக்கம், உடலின் அமைப்பு, உணர்வுகளின் கூட்டம், உறுதி இவையெல்லாம் குண வேறுபாடுகளுடன் கூடியிருப்பது தான் உடல் என்பது. அசையும் பொருள், அசையாப் பொருள் என்ற வகையில் எந்த உயிர் உண்டானாலும், அது உடல், உயிர் இரண்டின் சேர்க்கையால் பிறந்தது என்பதை அறிவாயாக!  

அர்ஜுனன்:     ஞானம் என்பது என்ன கண்ணா?

கண்ணன்: உயிரைப் பற்றிய அறிவே ஞானம் என்பது. அகிம்சை, பொறுமை, நேர்மை, தூய்மை, குருசேவை, அடக்கம், உறுதி ஆகியவற்றை மேற்கொள்ளுதல்.. அகங்காரம், ஆணவம், ஆரவாரம், ஆசையில் பற்றுதல், மனைவி, மக்கள், வீடு இவற்றில் ஒட்டுதல் என்பவற்றைத் துறத்தல்.. பிறப்பு, இறப்பு, நோய், மூப்பு இவற்றில் தீமை கண்டு தெளிதல்.. வருவதைக் கண்டு மகிழாமலும் போவதைக் கண்டு கலங்காமலும் சமநிலையில் இருத்தல்.. ஜனக் கூட்டம் கண்டு வெறுத்தல்.. தனிமையில் இருத்தல்.. ஆத்ம ஞானத்தில் நிலை பெறுதல்.. தத்துவ ஞானப் பலன்களை எண்ணுதல்.. என்னையே சரணடைந்து பக்தியைப் பண்ணுதல் ஆகியவவை அனைத்துமே ஞானம் என்று சொல்லப்படும். மற்றவை எல்லாம் அஞ்ஞானமாகும்.

அர்ஜுனன்:     இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது எது?

கண்ணன்: ஆதியும் அந்தமும் அற்ற பரம்பொருளே இந்த ஞானத்தால் அறியப்பட வேண்டியது! அந்தப் பரம்பொருள் உண்டு அல்லது இல்லை என்று சொல்ல முடியாதது. அதுவே உனக்கு சாகாத்தன்மை அளிப்பது. தன்னைத் தாங்குவோர் இல்லாமலே உலகனைத்தையும் தாங்கி நிற்பது. அதுவே பொருளைத் தாங்குவது.. அழிப்பது.. மறுபடியும் தோற்றுவிப்பது. குணங்கள் இல்லாமலே குணங்களை அனுபவிப்பது! புலன்களில்லாமலே புலன்களின் வேலைகளைச் செய்திடும் அற்புத சக்தி வாய்ந்தது! எல்லாப் பொருள்களிலும் அது உள்ளேயும் இருக்கிறது.. வெளியேயும் இருக்கிறது! அது கிட்டவும் இருக்கிறது.. எட்டவும் இருக்கிறது! அது பிளவுபடாதது.. பொருள்களில் பிளவுபட்டது போல காட்சியளிப்பது!

    அது அசையாதது.. அசையவும் செய்வது! அது இருளைக் கடந்தது.. ஒளிகளுக்கெல்லாம் ஒளியாய்த் திகழ்வது! அனைவர் உள்ளத்திலும் எழுந்தருளியிருப்பது! தலைகளும் முகங்களும்.. கண்களும் காதுகளும்.. கைகளும் கால்களும்.. உலகம் முழுவதும் பரவி நிற்பது! நுண்மையிலும் நுண்மையானது! அழியாதது! அறிவு மயமானது! எளிதில் அறிய முடியாதது! இது தான் ஞானத்தால் அறியப்பட வேண்டியது! ஆத்மாவால் அடையப்பட வேண்டியது! இந்தப் பரம்பொருளை அறிந்தவன் அமிர்தத்தையே அருந்தியவனாவான்! அழிவற்ற என் திருவடி மலர்களைப் பொருந்தியவனாவான்.    

அர்ஜுனன்:     இயற்கை, ஆத்மா இவற்றைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் கண்ணா!

கண்ணன்: இயற்கை, ஆத்மா இரண்டுமே தொடக்கமற்றவை. மனவேறுபாடுகளும் குணவேறுபாடுகளும் இயற்கையில் இருந்தே தோன்றுகின்றன. உடல் தான் அரங்கம்! அதில் நடிக்கும் புலன்களின் இயக்குநர் இயற்கையே! இதன் இலாப நட்டங்களை அனுபவிப்பதற்கு மட்டும் ஆத்மா காரணமாகிறது. இந்த ஆத்மாவானது இயற்கையில் கலந்து நின்று, இயற்கையிலிருந்தே தோன்றும் நல்லது கெட்டதை அனுபவிக்கிறது. இந்த ஆத்மாவிற்கு நல்ல பிறப்பு அல்லது கெட்ட பிறப்பு கிடைப்பதற்கு ஆசைகளே காரணமாகின்றன. இவ்விதம் இயற்கையே அனைத்திற்கும் இயக்குநர் என்பதையும், ஆத்மா எதற்கும் காரணம் அல்ல என்பதையும் அறிந்து கொண்டவன் உன்னதமானவன்! இவற்றைப் பற்றியெல்லாம் நன்கு புரிந்து கொண்டவன், அவன் எந்நிலையிலிருந்தாலும் மறுபிறப்பற்ற பொன் மயமானவன்!

சிலர் தியானத்தில் பக்குவமுற்ற அறிவால் ஆத்மாவைக் காண்கிறார்கள். சிலர் ஞான யோகத்தாலும் மற்றும் சிலர் கர்ம யோகத்தாலும் ஆத்மாவைப் பார்க்கிறார்கள். இது தெரியாத இன்னும் சிலர், பெரியோர் சொற்கேட்டு ஆத்மாவைக் காண முயற்சிக்கிறார்கள். காதால் கேட்டதை நம்பிக் காரியத்தில் ஈடுபடும் இவர்களும் கூட மறுபடியும் பிறப்பதில்லை.

இவ்விதம் உடம்பினுள் உயர்ந்து நிற்கும் ஆத்மாவைத் தான் அருகில் நின்று பார்ப்பவன் என்றும், அனுபவிப்பவன் என்றும், அன்பாய்த் தாங்குபவன் என்றும், அனுமதி அளிப்பவன் என்றும், ஆள்பவன் என்றும், அரிய பரமாத்மா என்றும், பலவிதமாய்ச் சொல்கிறார்கள். இந்தப் பரமாத்மா உடலுக்குள்  உறைந்தாலும் செயலற்றவன்! பற்றற்றவன். இருந்தாலும் எல்லாப் பொருள்களிலும் சமமாய் இருப்பவன்! அழியும் பொருள்களில் அழியாமல் இருப்பவன். அவனை உள்ளது உள்ள படி கண்டு கொண்டவன் தன்னைத் தானே வருத்திக் கொள்ள மாட்டான். பூதங்கள் அனைத்தும் பரம்பொருளில் அடங்கியிருப்பதையும், அதிலிருந்தே அவை விரிவடைகின்றன என்பதையும் உணர்கின்றவன் பிரம்ம நிலை அடைகிறான்.             

எனவே அர்ஜுனா! பரந்து விரிந்த ஆகாயம் எவ்விதம் எதிலும் ஒட்டிக் கொண்டிருக்கவில்லையோ, அது போல், ஆத்மாவானது தேகத்தில் பரிணமித்திருந்தாலும், அதிலே ஒட்டிக் கொள்வதில்லை. உலகத்தைச் சூரியன் ஒளி பெறச் செய்வது போல், தேகத்தை ஆத்மா ஒளி பெறச் செய்கிறது. இவ்விதம் உடல், உயிர் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை நன்கு உணர்ந்து கொண்டு, உயிரானது உடம்பிலிருந்து விடுதலை பெறுவதை ஞானக் கண்ணால் காணும் சித்தி பெற்றவர்கள் பிரம்மத்தையே அடைகிறார்கள். இத்தத்துவங்கள் மகா முனிவர்களால் பல விதமாய்ப் பாடப் பெற்றுள்ளன. வேதங்களிலும் பலவாறு தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அறிவுக் களஞ்சியமான பிரம்ம சூத்திரங்களிலும் நன்கு விளக்கப் பட்டுள்ளன.

(பதின்மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)


No comments:

Post a Comment