Tuesday, 27 August 2013

10. விபூதி யோகம்விபூதி யோகம்


   விபூதி என்றால் மகிமை அல்லது மகத்துவம் என்று பொருள். இறைவன் எங்கும் நிறைந்தவன். எல்லாமானவன்! அளவுக்கடங்காத இவ்வுலகனைத்தும் அவனது ஆளுகைக்கு உட்பட்டிருக்கின்றன. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 42 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

-----------

கண்ணன்: தடந்தோள் தனஞ்சயா! நீ என் அன்புக்குரியவன். நான் சொல்வதை விரும்பிக் கேட்பவன். நல்லது செய்யக் கருதி நான் உனக்குக் கூறும் உயர்ந்த தத்துவம் கேள்!

எனது பெருமையைத் தேவரும் முனிவரும் கூட அறிய மாட்டார்கள். ஏனெனில் அவர்கள் அனைவருக்கும் நானே மூலகாரணம். பிறப்பும் மூலமும் அற்றவனாய், நாயகன் எனும் பெயர் பெற்றவனாய் விளங்கும் என்னை உண்மையாய் அறிந்து கொண்டவன், சகல பாவங்களில் இருந்தும் விடுபட்டவன். அறிவும் தெளிவும், பொறுமையும் வாய்மையும், அடக்கமும் அமைதியும், இன்பமும் துன்பமும், பிறப்பும் இறப்பும், அச்சமும் துணிவும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், திருப்தியும் சமநிலையும், தவமும் தானமும், மனதின் மயக்கமும், மற்றும் அஹிம்சையும் என்னிடம் இருந்தே தோன்றுகின்றன! பிறகு தான் பிராணிகளின் மேல் கால் ஊன்றுகின்றன. மகரிஷிகள் எழுவரும், மனுக்கள் நால்வரும், மனுக்களும் என் மனத்தால் பிறப்பிக்கப்பட்டவர்கள். இவர்களின் பரம்பரை தான் இவ்வுலக மக்கள். இந்த என் பெருமையை அறிந்தவன், யோக சக்தியைப் புரிந்தவன் அசைக்க முடியாத யோக நிலை அடைந்தவன். இதில் சந்தேகமே இல்லை. உலகின் தோற்றத்திற்கும் அதன் மாற்றத்திற்கும் நானே காரணம் என்பதை நன்கறிந்தவன் என்னைத் தொழுகிறான். என்னைப் பற்றியே பேசிப்பேசி மகிழ்கிறான்! பிறருக்குப் போதனைகள் செய்கிறான். என்மேல் உயிரையே பெய்கிறான்! மனம் நிறைந்து உய்கிறான்! அவனுக்கு நான் புத்தி யோகம் அளிக்கிறேன்! உள்ளத்தில் கருணை தெளிக்கிறேன்! ஞான விளக்கினால் அறியாமையை அழிக்கிறேன். அதனால் அவன் எனையடைந்துச் செழிக்கிறான்.

அர்ஜுனன்:     கேசவா! நீயே பரம்பொருள்! நீயே நிலைத்தவன்! நீயே தூயவன்! நீயே நாயகன்! நீயே ஒளிர்பவன்! நீயே உயர்ந்தவன்! நீயே மூலதேவன்! எங்கும் நிறைந்தவன்! பிறப்பிலாச் சிறந்தவன்! இதைத்தான் எல்லா ரிஷிகளும், தேவரிஷி நாரதரும், அசிதர், தேவலர், வியாசர் ஆகியவர்களும் சொல்லுகிறார்கள். அதையே தான் நீயும் கூறுகிறாய். அனைத்தையும் நான் நம்புகிறேன்! ஆனால் ஒன்று. அரக்கரும் தேவரும் நிச்சயம் இதை அறியமாட்டார்கள். உயிர்களின் ஈசனான உலக நாயகனே! உன்னை நீயே தான் அறிவாய்! எங்கும் நீக்கமற எந்த மகிமையால் நீ நிறைந்துள்ளாயோ அதை மிச்சம் மீதயின்றி எனக்குச் சொல்லுவாயாக! உன்னை எப்படி நினைப்பது? எப்படித் தொழுவது? அமுதம் போன்ற உன்  மகிமைகளைக் கேட்கக்  கேட்க எனக்குத் திகட்டவே இல்லை! மீண்டும் அவற்றை எனக்கு விரிவாய் விளக்கிச் சொல்!

கண்ணன்: அப்படியே ஆகட்டும் அர்ஜுனா! மங்களகரமான என் மகிமைகளில் முக்கியமானவற்றை மட்டும் விளக்குவேன். நான்முகனாகிய படைப்புக் கடவுள் நானே! அனைத்து ஜீவராசிகளின் இதயத்திற்குள்ளும் இருப்பவன் நானே! அவற்றின் முதலும், முடிவும், நடுவும் நானே! பிராணிகளில் உள்ள உயிரும் நானே! மேலும் கேள் அர்ஜுனா!

பன்னிரண்டு ஆதித்தியர்களில் விஷ்ணு நான்! ஒளி விடும் கிரகங்களில் சூரியன் நான்! நட்சத்திரங்களில் சந்திரன் நான்! காற்று வகைகளில் மரீசி நான்! அது மட்டுமல்ல! வேதங்களில் நான் சாமவேதம்! புலன்களில் நான் உயர்ந்த மனம்! தேவர்களில் நான் இந்திரன்! ருத்ரர்களில் நான் சங்கரன்! யட்ச ராட்சசர்களில் நான் குபேரன்! அஷ்ட வசுக்களில் நான் அக்கினி! மலைகளில் நான் மகா மேரு! புரோகிதரில் நான் பிருகஸ்பதி! சேனாபதிகளில் நான் முருகவேள்! நீர்நிலைகளில் நான் நீள்கடல்! மகரிஷிகளில் நான் பிருகு! சொற்களில் நான் ஓங்காரம்! வேள்விகளில் நான் ஐபம்! உறுதியில் நான் இமயம்! தேவமுனிவரில் நான் நாரதர்! கந்தர்வரில் நான் சித்ர ரதன்! சித்தர்களில் நான் கபில முனி! பசுக்களில் நான் காமதேனு! குதிரைகளில் நான் உச்சை சிரவஸ்! யானைகளில் நான் ஐராவதம்! மரங்களில் நான் அரச மரம்! மனிதர்களில் நான் சக்கரவர்த்தி! ஆயுதங்களில் நான் வஜ்ராயுதம்! பாம்புகளில் நான் வாசுகி! படைப்பவர்களில் நான் மன்மதன்! நாகங்களில் நான் அனந்தன் என்ற ஆதிசேஷன்! நீர் தேவதைகளில்  நான் வருணன்! பிதிர்க்களில் நான் அரியமான்! அடக்குபவரில் நான் யமன்! அரக்கர்களில் நான் பிரகலாதன்! கணிப்பவர்களில் நான் காலம். விலங்குகளில் நான் சிம்மம்! பறவைகளில் நான் கருடன்! தூய்மையிலே நான் காற்று! வீரர்களில் நான் ராமன்! மீன்களிலே நான் மகரம்! நதிகளில் நான் ஜான்ஹவீ (கங்கை).      
வித்தைகளில் நான் ஆத்ம வித்தை! தர்க்கங்களில் நான் வாதம்! எழுத்துக்களில் நான் அகரம்! புணர்ச்சிகளில் நான் துவந்துவம்! கானங்களில் நான் பிருகத்சாமம்! சந்தங்களில் நான் காயத்ரீ! மாதங்களில் நான் மார்கழி! காலங்களில் நான் வசந்தம்! யாதவர்களில் நான் வாசுதேவன்! பாண்டவர்களில் நான் அர்ஜுனன். புத்திக் கூர்மையில் நான் சுக்கிராச்சாரி! இரகசியங்களில் நான் மௌனம்.           

மேலும் கேள் பார்த்திபா! எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும் மரணம் நானே!   

பிறக்கின்றவர்களின் பிறப்பும் நானே! ஏமாற்றுகிறவர்களின் சூதாட்டம் நானே! ஒளிமிக்கவர்களின் பிரகாசம் நானே! தண்டிப்பவர்களின் செங்கோல் நானே! வெற்றி விரும்பிகளின் நீதியும் நானே! துறவிகளின் ஞானம் நானே! உயிர்களின் வித்தும் நானே! முடிவில்லாத காலமும் நானே!  முயற்சியும் நானே! வெற்றியும் நானே! மங்கையர் தம் புகழ், புத்தி, செல்வம், பொறுமை, நினைவு, வாக்கு, திண்மை அனைத்தும் நானே! திறமை மிக்கது, செழுமை மிக்கது, நன்மை மிக்கது, நல்லொளியும் மிக்கது அத்தனையும் என் சாயலின் தோற்றமே! நானில்லாமல் இந்த உலகமே இல்லை! ஆம்! என் மகிமைகளுக்கு ஒரு முடிவே இல்லை! அதில் ஒரு சிறு துளியே இப்போது நான் சொல்லியிருப்பது! பன்னிப்பன்னி இதைப் பகர்ந்திடத் தேவையில்லை! என்னிடம் மிளிர்ந்திடும் இத்தனை அம்சங்களில் ஒரே ஓர் அம்சத்தால் உலகையே தாங்கி நிற்கிறேன் என்பதை நீ அறிந்து கொண்டால் அதுவே போதும்.


(பத்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment