Tuesday, 27 August 2013

18. மோட்ச சந்நியாச யோகம்


மோட்ச சந்நியாச யோகம்
சந்நியாசம் என்றாலும் தியாகம் என்றாலும் ஒன்றுதான்.   

செயல்களைத் துறப்பது சந்நியாசம்! செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம்.                                                                

இதில் 78 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

---------------

அர்ஜுனன்:            கேசி என்ற அரக்கனை அழித்த நீண்ட கைகளையுடைய கண்ணா! சந்நியாசம், தியாகம் ஆகியவற்றின் உண்மைப் பொருளைத் தனித்தனியே அறிந்து கொள்ள விரும்புகிறேன்.

கண்ணன்: பலன் கருதிச் செய்யும் செயல்களைத் துறப்பது சந்நியாசம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். அந்தச் செயல்களால் கிடைக்கும் பலன்களைத் துறப்பது தியாகம் என்று பண்டிதர்கள் சொல்லுகின்றனர். ஆசை முதலியவற்றை  விட்டுவிடுவதைப் போல், செயல்களையும் துறந்துவிடவேண்டும் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். வேறு சிலர் வேள்வி, தானம், தவம் ஆகிய செயல்களை விடக்கூடாது என்கின்றனர்

வேள்வி, தானம், தவம் ஆகிய மூன்று செயல்களையும் விடாமல் செய்தே தீர வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தும். விதிக்கப்பட்ட செயலை விட்டுவிடுவது முறையற்றது. ஏனெனில் இச்செயல்கள் தான் அறிஞர்களைத் தெளிய வைத்துத் தூய்மைப்படுத்துகின்றன! ஆனால் அவர்கள் அவற்றைச் செய்யும்போது பலன்களில் பற்றைத் துறந்து செய்யவேண்டும்.                                                                                                
பாரதச் செல்வனே! இந்தத் தியாகத்தைப் பற்றிய எனது கொள்கை என்ன என்பதைக் கேள்! தியாகம் மூன்று வகையானது. விதிக்கப்பட்டச் செயலை மதிமயக்கத்தால் துறப்பது தாமசத் தியாகமாகும். உடல் வருந்தப் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணத்தாலும், அதனால் உண்டாகப் போவது துன்பமே என்ற விரக்தியாலும் ஒருவன் செயலிழந்து நின்றால், அது ராஜசத் தியாகமாகும். அதற்கான பலன் அவனுக்குக் கிட்டாது. செய்யுந் தொழிலே கடமை என்றெண்ணிச் செயல்படும்போது பலன்களின் மேல் பற்றைத் துறந்துவிடுவது சாத்விகத் தியாகமாகும். சத்வகுணம் நிறைந்து புத்தியில் சிறந்தவன், ஒரு தொழில் நல்லது என்று அதை நாடுவதும் இல்லை.. தீயது என்று அதை விட்டு ஓடுவதும் இல்லை. உடலெடுத்தவன் எவனும் செயல்களை அறவே விட்டுவிட முடியாது. ஆனால்.. அதனால் வரும் பலாபலன்களைத் துறந்துவிட முடியும். அத்தகையவனே உண்மையான தியாகி. இத்தகைய தியாகிகள் அல்லாதவர்கள் இறந்த பிறகு இனியது, இன்னாதது, இரண்டும் கலந்தது என்ற பலன்களை அடைவார்கள். ஆனால்.. உண்மைத் தியாகிகளுக்கு அது இல்லை. இனி சந்நியாசத்தைப் பற்றி விளக்குவேன் அர்ஜுனா!

சந்நியாசம் பூண்டு எதிலும் பற்றினை நீக்கி, ஆசையைப் போக்கி மனத்தை வெற்றி கொண்டவன், இனி எதுவும் செய்ய வேண்டியதில்லை என்ற நிஷ்காமிய கருமா எனும் உயர்ந்த நிலையடைகிறான்! இவ்விதம் உயர்நிலை அடைந்தவன் ஞானத்தின் கொடுமுடியாகிய பிரம்மத்துடன் எவ்வாறு இணைகிறான் என்பதைச் சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

அவன் அறிவின் தூய்மையாலும், மனத்திண்மையாலும் தன்னையே அடக்கிவிடுகிறான்! ஒலி, ஒளி, ஊறு, உணர்வு, நாற்றம் எனும் ஐம்புலன் சுகங்களையும் ஒடுக்கி விடுகிறான்! விருப்பு வெறுப்புகளைக் கடந்துவிடுகிறான்தனிமையில் இருக்கிறான்! கொஞ்சமாய் உண்கிறான்! மனம், மொழி, மெய்யினை அடக்கி தியானத்தில் திளைக்கிறான்! வைராக்கியம் என்ற வாளை எடுத்து அபிமானம், அகந்தை, ஆணவம், காமம், மோகம், கோபம் ஆகியவற்றை வெட்டிச் சாய்க்கிறான்! தனது என்ற எண்ணம் நீங்கி அமைதியில் பாய்கிறான்! முடிவில் பிரம்மத்தில் தோய்கிறான்! இத்தகைய உத்தமனின் உள்ளம் தெளிந்து விடுகிறது! கவலை மறைந்துவிடுகிறது! ஆசை அழிந்து விடுகிறது! எல்லா உயிர்களும் சமமே என்ற எண்ணம் தோன்றி விடுகிறது! அவனுடைய உயர்ந்த பக்தி என் மேலேயே ஊன்றிவிடுகிறது! இதனால்நான் யார்.. எவ்வளவு பெரியவன்?” என்பதைப் பூரணமாய் அறிந்து கொள்கிறான்! இவ்விதம் உள்ளது உள்ளபடி என்னை அறிந்து கொண்ட பிறகு என்னுடனேயே கலந்து விடுகிறான்!          

நன்கு சித்தாந்தம் செய்யப்பட்டுள்ள சாங்கிய சாத்திரத்தின்படி, ஒரு செயல் நிகழ்வதற்கு ஐந்து காரணங்கள் இருந்தாக வேண்டும். இடம், இயங்கும் மனிதன், அவனது செயல்கள், செயலுறும் கருவிகள், அதற்கும் மேல் ஐந்தாவதாய் இறையருள் தேவை. மனம், வாக்கு, காயங்களால் மனிதன்  நல்லது கெட்டது எது தொடங்கினாலும் இவ்வைந்துமே அதற்குக் காரணங்களாகும். அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்றும் செயல் செய்யத் தூண்டுகின்றன. கருவி, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் செயலை முடித்து வைக்கின்றன. இதையறியாமல் எதையும்நானே செய்தேன்!” என்பவன் பக்குவமடையாத மூடனாவான். ஆகவே அர்ஜுனா! அகந்தையை மறந்தவன், பற்றினைத் துறந்தவன் எத்தனை பேரைக் கொன்று குவித்தாலும் பாவம் அவனைப் பற்றாது என்பதை அறிவாயாக!                                

அறிவு, செயல், அதைச் செய்பவன் என்ற மூன்றும் கூட குணவேறுபாடுகளால் மூன்று வகைப்படும் என்று சாங்கிய சாத்திரம் விளக்குவதையும் இப்போது சொல்லுகிறேன் கேள்.

வேறு வேறாய்ப் பிரிந்து நிற்கும் அனைத்து உயிர்களிலும் பிரிவற்றதும், அழிவற்றதுமான ஒரே ஆத்மாவைக் கண்டு கொள்ளும் அறிவு சாத்விக அறிவு. அனைத்து உயிர்களையும் வேறு வேறாய்ப் கண்டு அவற்றில் உறையும் ஆத்மாக்களும்  வேறு வேறானவை என்று கருதும் அறிவு ராஜச அறிவு. நிகழ்த்தும் செயலே எல்லாப் பலன்களையும் கொடுத்துவிடும் என்றெண்ணி அதுவே கதியெனக் கிடப்பதும், காரணமற்றதும், கடுகிலும் சிறியதும், உண்மையில் வறியதுமான அறிவு தாமச அறிவு.

நித்தியமென்று விதிக்கப்பட்ட சத்தியச் செயலை, பலன்களைவிட்டு, பற்றினைச் சுட்டு, விருப்பு வெறுப்பின்றிச் செய்தால் அது சாத்விகச் செயல். அகங்காரச் சித்தனாலும் பலன் கருதும் பித்தனாலும் மிகுந்த ஆயாசத்துடன் செய்யப்படும் செயல், ராஜசச் செயல்வினையின் விளைவையும், வீண் பொருள் செலவையும், செய்பவன் பலத்தையும், மற்றவர் நலத்தையும் எண்ணிப் பார்க்காமல் செய்யும் செயல் தாமசச் செயல்.

பக்குவ மனத்துடன் பற்றினை வென்றவன், உறுதியின் உச்சியில் ஊக்கமாய் நின்றவன், உற்சாகத்தை உடமையாய்ப் பெற்றவன், வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவன் சாத்விகன் எனப்படுவான். பலாபலன்களில் பற்றினை வைத்தவன், பணம் என்னும் பேயைப் பற்றிப் பிடித்தவன், தொல்லைகள் பிறர்க்குக் கொடுக்கத் துடிப்பவன், சுத்தமென்பதை அறவே துடைத்தவன், அழுகையும் சிரிப்பும் ஒருங்கே படைத்தவன் ராஜகன் எனப்படுவான். பரபரப்பானவன், பக்குவமற்றவன், முரடன், திருடன், மோசக்காரன், துக்கம் நிறைந்தவன், சோம்பலில் உறைந்தவன் தாமசன் எனப்படுவான்.                       இது போலவே அர்ஜுனா.. சத்வம் முதலிய குணவேறுபாடுகளுக்கு ஏற்ப புத்தியும், துணிவும் மூன்று வகைப்படும். மேலும் துக்கத்தை வீழ்த்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தும் பயிற்சியால் கிடைக்கும் சுகமும் கூட மூன்று வகைப்படும். இவை பற்றி இப்போது விளக்கிக் கூறுவேன்!     

செய்யத்தக்கது, செய்யத்தகாதது.. அஞ்சத்தக்கது, அஞ்சத்தகாதது.. நாடத்தக்கது நாடத்தகாதது.. கூடத்தக்கது, கூடத்தகாதது.. பந்தத்தில் சிக்க வைப்பது, சொர்க்கத்தில் சொக்க வைப்பது என்பவற்றை பகுத்தறியக் கூடியது சாத்விக புத்தியாகும். தர்மத்தையும் தாறுமாறாய்ப் புரிந்து கொள்வது ராஜச புத்தியாகும். அதர்மத்தையும்.. தக்கதையும், தகாததையும் அறியாமைச் சேற்றில் சிக்கி, தர்மத்தையே அதர்மமாகவும், அதர்மத்தையே தர்மமாகவும் ஏறுமாறாகப் புரிந்து கொள்ளுவது தாமச புத்தியாகும்.               

யோகத்தினால் கைகூடி வந்த எந்தத் துணிவால் உயிரையும், புலன்களையும் மனமானது அடக்கியாள்கிறதோ, அதற்குச் சாத்விகத் துணிவு என்று பெயர். பற்று மிகுதியால் பலனை எதிர்பார்த்து எந்தத் துணிவு அறம், பொருள், இன்பங்களைப் பேணிக்காக்கிறதோ அதற்கு ராஜசத் துணிவு என்று பெயர். தூக்கத்தையும், ஏக்கத்தையும்.. தொல்லை கொடுக்கும் துயரத்தையும்.. அச்சத்தையும் ஆணவத்தையும் விடாமல் பிடிக்கும் மூடனின் துணிவுக்கு தாமசத் துணிவு என்று பெயர்.         

முதலில் நஞ்சுபோல் கசக்கும்.. முடிவில் அமுதம்போல் இனிக்கும்! புத்தித் தெளிவினால் கிடைக்கும் இந்தச் சுகமே சாத்விக சுகமாகும். பொறி புலன்களின் பொருத்தத்தால் முதலில் அமுதமாய் இனித்து முடிவில் கசக்கும் சுகமே ராஜச சுகமாகும். முதலிலும் முடிவிலும் மயங்கச் செய்து.. மறதியிலும், சோம்பலிலும், தூக்கத்திலும் பிறக்கும் சுகமே தாமசச் சுகமாகும்.

இதுவரை நான் விளக்கிக் கூறியதுபோல் இயற்கையான இம்முக்குணங்கள் இல்லாத உயிர்கள், மண்ணுலக மனிதர்களிலும் சரி.. விண்ணுலக தேவர்களிலும் சரி.. இல்லவே இல்லை. இவ்விதம் அவரவரிடம் இயல்பாய்த் தோன்றும் குணங்களுக்கு ஏற்றபடி தான் பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர் என்ற செயற்பாகுபாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

மனத்தை அடக்குதல், புலன்களை மடக்குதல்.. தவப்பணி ஆற்றுதல், ஆத்திகம் போற்றுதல்.. தூய்மை, பொறுமை, நேர்மை முதலிய குணங்களைப் பூணுதல்.. அனுபவம், ஞானம் ஆகியவை காணுதல் பிராமணருக்கு இயல்பான தொழில்கள். ஆண்மையும், வீரமும், உறுதியும், துணிவும்.. ஈகையும், திறமையும்.. ஆளும் தன்மையும்.. போரினில் புறங்கொடா வீரியத் திண்மையும் சத்ரியர்களுக்கு இயல்பானத் தொழில்கள். பயிர்த்தொழில் செய்தல், பசுக்களைக் காத்தல், வாணிபம் புரிதல் ஆகியவை வைசியர்களுக்கு இயல்பானத் தொழில்கள்மற்றவர் தேவைக்கேற்பச் சேவை புரிவதே சூத்திரனுக்கு இயல்பான தொழில்.

தனக்கு இயல்பான தொழிலைக் களிப்புடன் செய்பவன் சித்தியடைகிறான்! கர்மத்தில் கருத்து வைக்கும் அவன் எவ்விதம் சித்தியடைகிறான் என்பதைச் சொல்லுகிறேன் கேள்!

ஒருவன் தன் கடமையைச் செய்கிறான். அதுவே எங்கும் நிறைந்த பரம்பொருளுக்கு செய்யும் பூசை. அது பரம்பொருளை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. அதனால் அவன் சித்தியடைகிறான். அடுத்தவர் கடமையைச் சிறப்புற முடிப்பதைக் காட்டிலும், தனக்கென அமைந்த தகவுறு கடமையை அரை குறையாய் விடுப்பதும் நல்லதே! அப்படித் தனக்கென அமைந்த தொழிலைச் செய்பவன் பாவத்தை அடைய மாட்டான். எனவே இயல்பாய் அமைந்த தொழில் இழிவானதென்றாலும் அதை விட்டுவிடக் கூடாது. ஏனெனில் நெருப்பைப் புகையானது சுற்றிக் கொண்டிருப்பதைப் போல், எந்தத் தொழிலையும் ஏதேனும் ஒரு குறை பற்றிக் கொண்டுதான் இருக்கிறது.
எந்தத் தொழிலை எங்கே செய்து கொண்டிருந்தாலும் என்னையே சரணடைந்தவன் என்னருளால் அழிவற்ற நிலையை அடைகிறான். அதனால் அர்ஜுனா.. காரியங்கள் அனைத்தையும் எனக்கே காணிக்கையாக்கி விடு! உனது குறிக்கோளாய் என்னையே கருதி விடு! அடைய வேண்டிய அறிவாய் என்னையே நினைத்து விடு! என்றும் எப்பொழுதும் என்னையே எண்ணத்தில் கொண்டு விடு! அப்படிச் செய்தால் உனக்கு வரும் இடையூறுகள் தூள் தூளாகும்! நான் சொன்னதைக் கேட்காவிட்டால் நீயே தூள் தூளாவாய்

அர்ஜுனா! “நான் போர் செய்ய மாட்டேன்!” என்று ஆணவத்தால் நீ முடிவு செய்தாலும், அந்த முயற்சியும் நிச்சயம் பலிக்காது. ஏனென்றால் பிறவிக்குணம் உன்னைப் போர் செய்யத் தூண்டிவிடும். மதி மயக்கத்தால்தான் போர் செய்ய மறுக்கிறாய்! இயல்பான உன் தொழிலுக்குக் கட்டுப்பட்டு.. உன்னையே மறந்து நீ போர் செய்யத்தான் போகிறாய்! ராட்டினத்தில் பூட்டிய பாவைகளைப்போல் இறைவன் தன் மாயா சக்தியால் அனைத்து உயிர்களையும் ஆட்டிப்படைக்கிறான். அவற்றின் உள்ளங்களில் நின்று பொங்கி வழிகிறான். அதனால் உடலாலும் உள்ளத்தாலும் அவனையேச் சரணடைந்து விடு! அவனுடைய அருளால் உனக்கு அமைதி கிடைக்கும். அழிவற்ற உயர்ந்த நிலை சித்திக்கும். பரம ரகசியமான இந்த ஞானத்தைப் பற்றி விரிவாய் விளக்கிச் சொல்லி விட்டேன். இதை நன்றாய் ஆராய்ந்து பார்! பிறகு எப்படித் தோன்றுகிறதோ.. அப்படிச் செய்!

அர்ஜுனா! இன்னும் ஒரு முறை இரகசியங்களுக்குள் இரகசியமான என் பரம வசனத்தைக் கேள்! நீ எனக்கு நண்பன் என்பதால்தான் நன்மை தரும் இந்த இரகசியத்தைச் சொல்லுகிறேன்! மனத்தை என்னிடமே வை! எனக்கே பக்தனாயிரு! எனக்கே பூஜை செய்! என்னையே வணங்கு! இப்படியெல்லாம் செய்தால் என்னையே நீ அடைவாய்! என் இனிய நண்பனே! ஆணையிட்டுச் சொல்லுகிறேன்.. இது சத்தியம்! எல்லாவற்றையும் துறந்துவிட்டு என்னையே சரணடைந்து விடு. வருந்தாதே நண்பனே! எல்லாப் பாவங்களிலிருந்தும் உன்னை நான் விடுவிக்கிறேன்.

ஆனால் ஒன்று நண்பா! இந்த உண்மைகளையெல்லாம் தவமில்லாதவனிடமும், பக்தியற்றவனிடமும், கேட்க விருப்ப மில்லாதவனிடமும், என்னை வெறுப்பவனிடமும் எப்பொழுதும் சொல்லாதே! இந்தப் பரமரகசியத்தை என் பக்தர்களிடம் பரப்புபவன் நிச்சயம் என்னையே வந்தடைவான்! நான் விரும்பியதைச் செய்வதில் அவனை விடச் சிறந்தவர் வேறு யாருமில்லை. அவனை விடச் சிறந்த அன்பனும் எனக்கு இப்பூவுலகில் இருக்க முடியாது.                                     

நமக்கிடையே இங்கு நடந்த இந்த உன்னதமான உரையாடலை யார் படித்தாலும் சரி.. ஞான வேள்வியால் அவர்கள் என்னை வணங்கியதாகவே நினைப்பேன். அருவருப்பில்லாமல் அக்கறையுடன் ஒருவன் இதைக் காதால் கேட்டால் கூடப் போதும்.. எல்லாப் பாவங்களும் நீங்கி.. அவன் அமரநிலை அடைவான் என்பது உறுதி.

பார்த்தா! உன் மனத்தை ஒருமுகப்படுத்தி என் உபதேசத்தைக் கேட்டாயா? தனஞ்சயா! அறியாமை என்ற உன் மயக்கம் நீங்கியதா?     

அர்ஜுனன்:            அச்சுதா! உன் அருளால் மயக்கம் நீங்கியது! இழந்த நினைவு திரும்பவும் வந்தது! ஐயம் அகன்றது! நன்னிலை அடைந்தேன்! நீ செய்யச் சொன்னதை இப்போது செய்யப் போகிறேன்! இதோ.. எடுப்பேன் காண்டீபத்தை.. தொடுப்பேன் பகைவர் மீது பாணங்களை!                                      

(இப்போது காட்சி அரண்மனை முற்றத்திற்கு மாறுகிறது! திருதராஷ்டிரனுக்குப் பக்கத்தில் இருக்கும் அமைச்சர் சஞ்சயன் ஞானதிருஷ்டி மூலம் கண்டு விளக்கியதைத் தொடர்ந்து முடிவுரை கூறுகிறான்)

சஞ்சயன்:   இவ்விதம் கண்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் நடந்த மயிர்க்கூச்செறியும் அற்புதமான உரையாடலை நான் கேட்டேன். வேதவியாசர் அருளால் இரகசியங்களுக்குள் சிறந்த இரகசியமான இந்த யோகத்தைக் கண்ணன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் கேட்டேன். வேந்தே! இந்த அதியற்புதமான உரையாடலை நினைத்து நினைத்து நான் மீண்டும் மீண்டும் மகிழ்ச்சி அடைகிறேன்! அந்த கண்ணனின் அற்புத வடிவத்தை எண்ண எண்ண எனக்குத் திகைப்புண்டாகிறது. மீண்டும் மீண்டும் மகிழ்ச்சியடைகிறேன்! உலக நாதனாம் கண்ணன் இருக்குமிடத்தில்.. காண்டீபம் தாங்கிய அர்ஜுனன் இருக்குமிடத்தில் செல்வம் கொழிக்கும். வெற்றி செழிக்கும்.. நீதியும் நியாயமும் தழைக்கும் என்பது என் துணிவு.


(பதினெட்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment