Tuesday, 27 August 2013

5. கர்ம சந்நியாச யோகம்கர்ம சந்நியாச யோகம்


உடலால் செயல்படுதல் கர்மம்! உள்ளத்தால் செயல்படுதல் சந்நியாசம். ஞான யோகமும் சந்நியாச யோகமும் ஒன்றே. கர்ம யோகமும் சந்நியாச யோகமும் ஒரே பலனைத்தான் கொடுக்கின்றன. தொழிலைத் துறப்பதைக் காட்டிலும் அதைச் செய்வதே மேலானது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 29 சுலோகங்கள் உள்ளன.

----------------

அர்ஜுனன்: கிருஷ்ணா! ஒரு முறை கர்மத்தைத் துறந்து விடச் சொல்லுகிறாய்! மறுமுறை கர்மத்தை மேற்கொள்ளச் சொல்லுகிறாய்! சந்தேகத்திற்கு இடமின்றி, இரண்டில் எது சிறந்தது என்று முடிவாய்ச் சொல்!

கண்ணன்: கபித்விஜயா! கர்மம் செய்தாலும் சரியே! அதனைத் துறந்தாலும் சரியே! இரண்டுமே சொர்க்கத்தை அளிப்பவை. ஆனாலும் கர்மத்தைத் துறப்பதைக் காட்டிலும், அதைச் செய்வதே மேலானது. ஏனெனில் விருப்பு வெறுப்புகளைக் கடந்த உண்மையான ஞானி, இன்ப துன்ப இரட்டைகளை நீக்கிவிடுவதால், இனிதே பந்தத்திலிருந்து விடுபடுகிறான். ஆத்ம ஞானம் வேறு, செயல் நிலை வேறு என்று அறியாதவர்கள் சொல்வார்கள்! அறிந்தவர்கள் அவ்விதம் சொல்ல மாட்டார்கள். ஏனெனில் இவை இரண்டில் எதைக் கடைப்பிடித்தாலும் சொர்க்கம் கிட்டுவது நிச்சயம். ஆத்ம ஞானி அடையும் அதே உன்னத நிலையை, கர்ம யோகியும் நிச்சயம் அடையலாம். உண்மையில் சொல்லப் போனால் கர்மத்தைச் செய்வது, கர்மத்தைத் துறப்பது இரண்டுமே ஒன்று தான். இதை உணர்ந்தவனே விபரம் தெரிந்தவன்.                                                       
மேலும் ஒன்றைப் புரிந்து கொள் அர்ஜுனா! துறவியாக வேண்டுமென்றாலும் சில கர்மங்களைச் செய்து தான் ஆக வேண்டும். அந்தக் கர்மங்களின் மூலம் மனத்தைச் சித்தப்படுத்தி, ஆத்மாவைச் சுத்தப்படுத்தி, புலன்களைக் கட்டுபடுத்த வேண்டும். முடிவில் உயிர்கள் அனைத்திலும் ஊடாடும் பரம்பொருளின் சொரூபமே ஆத்மா என்பதை உணர வேண்டும். இத்தகைய திறமை படைத்தவன் வெகுவிரைவில் இறைவனை அடைகிறான்.

உண்மையான ஞானி எதையுமே தான் செய்வதாய் நினைப்பதில்லை. அவன் பார்த்தாலும் கேட்டாலும், உண்டாலும் உறங்கினாலும், தொட்டாலும் விட்டாலும், நடந்தாலும் நுகர்ந்தாலும், எடுத்தாலும் கொடுத்தாலும், சுவாசித்தாலும் பேசினாலும், திறந்தாலும் மூடினாலும்எல்லாம் அவன் செயல்என்றே நினைக்கிறான். செய்வதைச் செய்துவிட்டுப் பலாபலன்களை ஈசுவரனிடம் விட்டுவிடுகிறவன் தாமரை இலை போன்றவன்! அவன் மேல் பாவம் எனும் தண்ணீர் ஒட்டுவதில்லை.           

துறவிகள் கர்மத்தில் ஈடுபடுவது எதற்காக? உடம்பு, மனம், அறிவு மற்றும் ஐம்புலன்களில் படிந்துள்ள பற்று எனும் அழுக்கை அகற்றி, ஆத்மாவைப் பரிசுத்தம் ஆக்கத்தான். கர்மங்களின் பலனைத் துறக்கும் ஞானி, நிலையான நிம்மதியை அடைகிறான். ஆனால் இலாப நோக்குடன் செயல்படுபவன் அச்செயலுக்குள்ளேயே மாட்டிக் கொள்கிறான். உடம்பை வென்று உள்ளத்தாலும் ஞானியானவன் எதையும் செய்வதில்லை! செய்யப் பிறரை தூண்டுவதும் இல்லை. அவன் நவவாயில் நகரத்தில் சுகமாய் இருப்பான். “இதைச் செய்என்று ஆத்மா ஆணையிடுவதும் இல்லை! செயல்களை உண்டாக்குவதும் இல்லை! பலாபலன்களுடன் நம்மை பந்தப்படுத்துவதும் இல்லை. இயற்கையே எல்லாவற்றையும் இயக்குகிறது. அந்த ஆத்மா எவனுடைய பாவத்தையும் எடுத்துக் கொள்வதில்லை! புண்ணியத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை. மூடத்தனம் அறிவை மூடி இருப்பதால், ஜீவராசிகள் மயக்க நிலையில் உள்ளன. இந்த மயக்கம் அகல வேண்டுமானால், ஆத்மாவில் ஞானம் உதிக்க வேண்டும். அப்போது ஆத்மா சூரியனைப் போல் பிரகாசிக்கும். ஞானத்தால் பாவங்களைக் கழுவிக் கொண்டு, புத்தி முதலான எல்லாவற்றையும் பரம்பொருளோடு சங்கமிக்கிறவர்கள் பிறவிப் பெருங்கடலைத் தாண்டிவிடுகிறார்கள்.

சவ்யசாசின்! சமநோக்கைப் பற்றி இப்போது விளக்குவேன்! நாயையும், பசுவையும், நாய் தின்னும் நீசனையும், மிகப்பெரிய யானையையும் செந்தண்மை பூண்டொழுகும் அந்தணனையும் ஞானிகள் சமமாய்த் தான் பார்ப்பார்கள்! சம நோக்குடைய இவர்கள் பிறப்பு இறப்பு இரண்டையும் வென்றுவிடுகிறார்கள். ஏனெனில் எங்கும் எதிலும் சமமாய் இருக்கும் ஈசுவரனும் அவர்களும் ஒன்றாகிவிடுகிறார்கள். ஈசுவர சம்பத்தைப் பெற்றவன் வேண்டியது கிடைத்த போது இன்புறுவதும் இல்லை! வேண்டாதது கிடைத்த போது துன்புறுவதும் இல்லை.                                         
ஆத்ம சுகத்தைப் பற்றி இனி கூறுவேன் அர்ஜுனா! வெளியுலகில் கவனம் செலுத்தாதவன் ஆத்மாவின் உள்ளுக்குள் சுகங்களைக் கண்டு கொள்கிறான். ஈசுவரனிடம் ஈடுபாடு கொள்ளும் அவன், அழிவில்லாத சுகத்தில் திளைக்கிறான். உலகிலுள்ள எல்லாப் பொருள்களுக்கும் ஆதியும் உண்டு! அந்தமும் உண்டு! அவற்றில் சுகமும் உண்டு! துக்கமும் உண்டு! எனவே விவேகி அவற்றில் நாட்டம் செலுத்த மாட்டான். உடம்பெடுத்த இப்பிறவிலேயே காமத்தின் வேகத்தையும், குரோதத்தின் தாபத்தையும் தடுக்கும் சக்தியுள்ளவன் தான் சுகம் பெற்ற ஞானி. ஆத்மாவின் மேல் விருப்பம் கொண்டு, அது காட்டும் வெளிச்சத்தில் வழியைக் கண்டு, அந்த ஆத்மாவின் உள்ளுக்குள்ளேயே சுகத்தில் திளைப்பவன் ஈசுவரனாகவே மாறி விடுகிறான்! பிரம்மானந்தத்தில் ஊறிவிடுகிறான்.  மாசுகளை நீக்கிக் கொண்டவர்களும், சந்தேகத்தைப் போக்கிக் கொண்டவர்களும், உலக நலத்தையே தங்கள் நலமாய் ஆக்கிக் கொண்டவர்களும், மனக்கதவைப் பூட்டிகொண்டவர்களும், ஆத்மஜோதியில் உள்ளத்தை நாட்டிக் கொண்டவர்களும் மண்ணுலகில் மட்டுமல்ல, விண்ணுலகிலும் பிரம்மானந்தத்தை அனுசரிக்கிறார்கள்.

புறவுலகக் காட்சிகளை வெளியிலே இருக்க விட்டு, நயனப்பார்வையைப் புருவ மத்தியில் நிலைக்க விட்டு, நாசிவழிப் பிராண அபானங்களை சமப்படுத்தி மூச்சுவிட்டு, ஆசை, அச்சம், கோபம் இவற்றை நீக்கிவிட்டு, அறிவு, மனம், தேகம் இவற்றை அடக்கிவிட்டு, சொர்க்க நோக்கமே கொண்டிருக்கும் முனிவனுக்கு எந்நேரமும் சுகம் தான்! எந்த இடமும் சொர்க்கம் தான்.                   

தனஞ்சயா! தவங்களையும் யாகங்களையும் அனுபவிப்பவன் நானே! அனைத்து உலகங்களுக்கும் ஈசன் நானே! சகல உயிர்களுக்கும் நண்பன் நானே! இதனை அறிந்தவன் நிம்மதியில் திளைக்கிறான்.                                    


(ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment