Tuesday, 27 August 2013

7. விஞ்ஞான யோகம்விஞ்ஞான யோகம்

     


     விஞ்ஞானம் என்பது அனுபவம். மாயை இறைவனின் உண்மைத் தன்மையை மறைக்கிறது. அதை நீக்க வல்லவன் அந்த இறைவனே! நான்கு வகையான பக்தர்களில் ஈசுவர தத்துவத்தை உணர்ந்த ஞானியே சிறந்தவன். தேவதைகளை வணங்கும் பக்தர்கள் இறைவன் அளிக்கும் பலன்களைப் பெறுகின்றனர். ஆனால் அவை அழியக் கூடியவை. இக்கருத்துக்கள் இதில் விளக்கப் பெறுகின்றன.

இதில் 30 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

                ----------

கண்ணன்: மேலும் கேள் பார்த்தா! என்னையே மையப்படுத்தி அறியும் வழியை, ஐயத்திற்கு இடமின்றி இப்போது கூறுவேன்! ஆன்மீக ஞானம், அனுபவம் காட்டும் அகண்ட விஞ்ஞானம் இரண்டைப் பற்றியும் முழுமையும் அறிந்தவன், உலகினில் அனைத்தும் முற்றும் கற்றவன்.                           

ஆயிரக்கணக்கான மக்களில் யாரோ ஒருவன் தான் சித்தியடைய முயல்கிறான்! அவ்விதம் சித்தியடைய முயல்பவர்களில் எவனோ ஒருவன் தான் என்னை உள்ள படி அறிகிறான். எனது இயற்கையானது பூமி, நீர், நெருப்பு, காற்று, வானம், மனம், புத்தி, அகங்காரம் என்று எட்டு வகையாய்ப் பிரிந்துள்ளது. எனது இயற்கையில் இதுவே தாழ்ந்தது! உயர்ந்த இயற்கையும் ஒன்றுண்டு அர்ஜுனா! அதுவே ஜீவன் என்பது. அதன் மூலம் தான் நான் இந்த உலகைத் தாங்குகிறேன். இவ்விரு வகை இயற்கையிலிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றுகின்றன. உலகங்களின் தோற்றத்திற்குக் காரணம் நானே! அவற்றின் அழிவுக்கும் காரணம் நானே!          

தனஞ்ஜயனே! என்னை விட உயர்ந்தது, உலகில் வேறொன்றும் இல்லை. நூலில் கோர்த்த மணிகள் போல் உலகம் முழுவதும் என்னையே பற்றி நிற்கிறது. நீரினில் சுவையும் நானே! நெருப்பினில் சுடரும் நானே! சூரிய சந்திரரில் ஒளியும் நானே! வானிலே ஓசையும் நானே! வேதங்களில் ஓம்காரம் நானே! பூமியில் நறுமணம் நானே! பூதங்களின் வித்தும் நானே! உயிர்களில் உயிரும் நானே! முனிவர்களின் தவமும் நானே!  அறிஞரின் அறிவும் நானே! மனத்தில் ஆண்மையும் நானே! வீரரின் வீரம் நானே! பலவானின் பலமும் நானே! தர்ம விரோதமற்ற ஆசையும் நானே!                    

சாத்விகம், ராஜசம், தாமசம் என்ற குணங்களுடன் உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும் என்னிலிருந்து தோன்றியவை தான். அவற்றிற்கு நான் அடங்கியவனல்ல! அவை அனைத்துமே என்னுள் அடக்கம். இந்த மூன்று குணமக்கள், அந்தக்  குணங்களுக்கு நான் அப்பாற்பட்டவன் என்பதையும், அழிவற்றவன் என்பதையும் அறிந்து கொள்வதில்லை. முக்குண மயமான இந்தத் தேவமாயை வெல்லற்கரியது! என்னைச் சரண் அடைந்தவர் மட்டுமே அதை வெல்ல முடியும். ஆனால் பாவிகள் என்னைச் சரணடைவதில்லை. அவர்கள் மூடர்கள்! மானிடப் பதர்கள்! அறிவிழந்தவர்கள்! அரக்கத் தன்மை கொண்டவர்கள்!

நான்கு விதமானவர்கள் நாடி என்னை வழிபடுகின்றனர். துயரமடைந்தவர்கள், நற்கதியை நாடுகின்றவர்கள், ஈசுவரத் தத்துவம் அறிய விரும்புகிறவர்கள், ஈசுவர ஞானம் கைவரப் பெற்றவர்கள் என்ற இந்த நான்கு வகையினரும் உயர்ந்தவர்கள் தான்இவர்களில் எப்பொழுதும் என்னிடம் தொடர்பு கொண்டு, என்னை மட்டுமே வணங்குபவன் தான் உயர்ந்த ஞானி. மனத்தை அடக்கி என்னில் கலந்துவிட்டவனே என்னுடைய ஆத்மா! பற்பல பிறவிகளின் பயனாய் எல்லாம் கண்ணனே!” என்ற ஞானம் பெற்றவனே மகாத்மா! அவன் கிடைத்தற்கரியவன்! அவன் என்னை நேசிக்கிறான்! நானும் அவனை நேசிக்கிறேன்.  

அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசைப்படும் மக்கள் விரதங்கள் மேற்கொள்கிறார்கள்! தேவதைகளை வணங்குகிறார்கள். அந்த வழிபாட்டையும் நான் ஏற்றுக்கொள்ளத் தான் செய்கிறேன். அது மட்டுமல்ல.. அத்தேவதைகள் மூலமாகவே, அவர்கள் விரும்பிய பலனை நானே அவர்களுக்குத் தருகிறேன். ஆனால் அந்தப் பலன் அழிந்துவிடக் கூடியது. தேவர்களை வழிபட்டால் தேவர்களை அடையலாம்! என்னை வழிபட்டால் என்னையே அடையலாம். இணையற்ற..அழிவற்ற என் பரமாத்ம வடிவத்தை அறியாத மூடர்கள், பிறவியற்ற என்னை பிறந்தவன் என்று எண்ணுகின்றனர். மாய சக்தியால் மறை பொருளாய் விளங்கும் நான் அனைவருக்கும் வெளிப்படையாய்த் தெரிவதில்லை. ஆனால் தெளிவற்ற மக்கள், ஆதியும் அந்தமும் இல்லாதவன் நான் என்பதை அறிந்து கொள்வதில்லை. நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை அனைத்தையும் நான் அறிவேன். ஆனால் என்னைத் தான் யாரும் அறிந்ததில்லை.

சுகம் துக்கமாகிய இருவகை உணர்வுகளால், எல்லா ஜீவராசிகளும் பிறக்கும் போதே மயங்கி விடுகின்றன. ஆனால் புண்ணியத்தால் பாவத்தை விரட்டுகிறவர்கள் இந்த இரட்டைகளின் பிடியிலிருந்து விடுபட்டு, உறுதியான விரதம் பூண்டு என்னையே வணங்குகிறார்கள். ஆத்ம யோகம் கர்ம யோகம் அனைத்தையும் அறிந்து கொண்டவர்கள், மூப்பு மரணம் ஆகியவற்றின் பிடியிலிருந்து விடுபடுவதற்காய் என்னையே சரணடைந்து வணங்குகிறார்கள். பூதங்கள் பற்றிய அறிவும், தெய்வங்கள் பற்றிய உணர்வும், கேள்விகள் பற்றிய தெளிவும் பெற்றவர்கள், அவர்கள் இறக்கும் காலத்திலாவது எனது உண்மைச் சொரூபத்தை அறிகிறார்கள்.


         (ஏழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment