Tuesday 27 August 2013

12. பக்தி யோகம்



பக்தி யோகம்



பக்தி என்பது வணங்குவது.                          

உருவமற்ற பரம்பொருளில் மனத்தைச் செலுத்துவது கடினமானது! கண்ணனின் திருவடிகளில் பக்தி செய்வது சுலபமானது! விரைவில் பலனளிப்பது. கண்ணனின் கல்யாண குணங்களை நினைக்கப் பழக வேண்டும். இது முடியாவிட்டால் இறைத் திருப்பணிகளில் ஈடுபடவேண்டும். இல்லையேல் ஆத்ம தியானம் செய்யவேண்டும்.                          

இதில் 20 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

----------

அர்ஜுனன்:     கண்ணா! இப்போது நீ சொன்னதுபோல் உன்னையே பக்தி செய்பவர்கள் அல்லது கண்ணுக்குத் தெரியாத பிரம்மத்தை வணங்குபவர்கள் இவர்களில் யார் யோகத்தை நன்கு அறிந்தவர்கள்?

கண்ணன்: அர்ஜுனா! இதயக்கமலத்தில் என்னையே இருத்தி, எண்ணங்கள் அனைத்தையும் யோகத்தில் நிறுத்தி, அக்கறையினை தியானத்தில் பொருத்தி என்னைத் தொழுபவர்கள் மேம்பட்டவர்கள் என்பது என் கருத்து. கருமங்களனைத்தையும் எனக்கே அர்ப்பிக்கும் அவர்கள், பிறப்பு இறப்பென்னும் பெருங்கடலை விரைவில் நீந்திக் கடக்கிறார்கள். ஆனாலும், நிலையானதும் நினைவிற்கு எட்டாததும், அசையாததும் அழிவே இல்லாததும், எங்கும் நிறைந்ததும் எல்லோர்க்கும் பொதுவானதும், சொல்லில் அடங்காததும், சொரூபம் வெளியில் தெரியாததுமான பரம்பொருளை, புலன்களை அடக்கி வணங்கக் கூடியவர்களும் முடிவில் என்னைத்தான் அடைகிறார்கள். வடிவமற்றதை வணங்குகிறவர்களுக்கு வழியில் குறுக்கிடும் தொல்லைகள் அதிகம்! உடலபிமானம் உள்ளவர்க்கு உருவமற்ற ஒன்றின் மேல் உன்னத எண்ணம் தோன்றுவது கடினமானது! வடிவத்துடன் இருக்கும் என்னை வணங்குவது சுலபமானது.

எனவே அர்ஜுனா! என்னிடமே உன் மனத்தை வைத்து விடு! உன் புத்தியினால் என் உடம்பையே தைத்து விடு! பிறகு நீ என்னிடமே தங்கி விடுவாய்! இது உறுதி! இது உனக்கு முடியவில்லை என்றால், பயிற்சி முறையினால் பக்தியில் கனிந்து என்னை அடைவதற்கு முயற்சி செய்! இதுவும் முடியவில்லை என்றால், எந்தக் காரியத்தையும் எனக்காகவே செய்யத் தொடங்கு! இதுவும் முடியாவிட்டால், கர்ம யோக முறையைப் பின்பற்றி, பலாபலன்களைத் தியாகம் செய்துவிடு! பயிற்சி முறை பக்தியைக் காட்டிலும் ஞானம் சிறந்தது! ஞானத்தைக் காட்டிலும் தியானம் சிறந்தது. தியானத்தைக் காட்டிலும் தியாகம் சிறந்தது! கரும பலனைத் துறக்கும் இத்தியாகத்தினால் அருமைமிக்க சாந்தி உண்டாகும்.

அனைத்து உயிர்கள் மேலும் அன்பும் கருணையும் கொண்டவனாய், இன்ப துன்ப விருந்தை ஒன்றுபோல் உண்டவனாய், அகந்தையும் மமதையும் ஓடிடக் கண்டவனாய், அடக்கத்துடனும் அசையாத உறுதியுடனும், பொறுமையுடனும் பொங்கும் மகிழ்ச்சியுடனும், புத்தியை என்மேல் நாட்டிய பக்தியுடனும் இருப்பவன் எனக்கு இனித்துக் கிடப்பவன்! தான் இடர்ப்பட்டாலும் தாங்கும் உலகுக்கு இடர் உண்டாக்காமல்.. களிப்பு, கலக்கம், அச்சம், கோபம் இவற்றிலிருந்து விடுபட்டவன் எனது மனதிற்குகந்தவன்! ஆசைகளற்றவன், கவலைகள் விட்டவன், திறமைகள் மிக்கவன், தூய்மையில் சிறந்தவன், கருமம் துறந்தவன், நடுநிலைப்பட்டவன், நல்லது கெட்டதை நாடாது விட்டவன் எனது நட்பிற்குரியவன். சுகமும் துக்கமும்.. நட்பும்  பகையும்.. குளிரும் வெப்பமும்.. மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்.. மானமும் ஈனமும் எல்லாம் சமம் எனும் தெளிவு பெற்றவனாய், இருப்பதைக் கொண்டே திருப்தி கொள்பவனாய், தனக்கென இல்லம் தயார் செய்யாதவனாய், என்னிடம் மாறாத பக்தி செலுத்துபவன் எனக்குப் பிரியமானவன்! அமிர்தம் போன்ற இவ்வற்புத தர்மத்தை, நான் சொன்னபடியே அக்கறையுடன் பின்பற்றி என்னை வணங்கும் பக்தர்கள் அனைவருமே எனக்கு மிக மிகப் பிரியமானவர்கள்!


(பன்னிரண்டாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment