Tuesday, 27 August 2013

3. கர்ம யோகம்கர்ம யோகம்


கர்மம் என்பது செய்யும் தொழில்.

தொழில் செய்வது இயற்கையானது! மேன்மையானது. செய்வது அனைத்தையும் பரம்பொருளுக்கே அர்ப்பணிந்து விட வேண்டும். ஞான யோகம் தத்துவஞானிகளுக்கே பொருந்தும்! மற்றவர்களுக்குக் கர்ம யோகமே சிறந்தது. இக்கருத்துக்கள் இதில் விளக்கப்படுகின்றன.

இதில் 43 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

--------------

அர்ஜுனன்:            ஜனார்த்தனா! கர்மத்திலும் சிறந்தது ஞானமே என்பது உனது கொள்கையானால், ஏன் என்னை இந்தக் கொடும்போரில் ஈடுபடுத்துகிறாய்? முன்னுக்குப் பின் முரண்படுவது போல் தோன்றும் உன் உபதேச மொழிகள், எனக்குக் குழப்பத்தை உண்டாக்குகின்றன. இப்போது இரண்டிலே ஒன்றைச் சொல்! எது எனக்கு நல்லது? அதைப் பின்பற்றி நான் பயன் பெறுகிறேன்!

கண்ணன்: குற்றமற்ற அர்ஜுனா! குவலயத்தில் மனிதனாய்ப் பிறந்தவன் மேற்கொள்ள வேண்டிய தவநெறிகளை நெடுங்காலத்திற்கு முன்பே நான் சொல்லியிருக்கிறேன். ஒன்று தத்துவஞானிகளுக்குரியது.. ஞான யோகம்! இன்னோன்று மற்றவர்களுக்குரியது.. கர்ம யோகம்!

ஒருவன் கர்மங்களைச் செய்யாமல் இருப்பதாலேயே செயலற்ற நிலையை அடைவதில்லை. இன்னொருவன் துறவியாவதால் மட்டுமே பரம்பொருளை அடைவதும் இல்லை. உலகில் பிறந்த எவனும் கணப்பொழுதும் கூட இயங்காமல் இருப்பதில்லை. இயற்கைக் குணமே அவனை இயங்கத் தூண்டுகிறது. எவனொருவன் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு, உள்ளத்தால் அவற்றை நினைத்துக் கொண்டிருக்கிறானோ.. அவன் மகா மூடன்! ஒழுக்கமற்றவன்! வேஷக்காரன்! கட்டுக்குள் உணர்வுகளை வைத்துக் கொண்டு, கர்ம யோக காரியங்களில் ஈடுபடுகிறவனே உயர்ந்தவன். அதனால், உனக்கு விதிக்கப்பட்ட கருமத்தைச் செய்வாயாக! இல்லையெனில் உடம்பே உனக்குப் பாரமாகும். சும்மா இருப்பதைக் காட்டிலும், ஏதாவது ஒரு கருமம் செய்வதே வாழ்வின் சாரமாகும்.

கர்மத்தை எப்படிச் செய்வது என்பதைச் சொல்லுகிறேன். எந்தத் தொழிலையும் ஈசுவரக் கடமை என்றே செய்ய வேண்டும். பயன் கருதிச் செய்யும் தொழில் தான் உலகைப் பிணித்திருக்கும் விலங்கு. சிருஷ்டி துவக்கத்தில் பிரம்மதேவன் ஒரு யாகம் நடத்தி, மனிதர்களைப் படைத்து, அவர்களைப் பார்த்துச் சொன்னான்: ‘பலுகிப் பெருகுங்கள்! யாகம் உங்கள் ஆசைகளை நிறைவேற்றும் காமதேனுவாய் இருக்கட்டும்! நீங்கள் தேவர்களை வழிப்படுங்கள்! அவர்கள் உங்களுக்கு வளங்களைப் பொழியட்டும்! இவ்விதம், பரஸ்பரம் பேணி பெருநன்மை அடையுங்கள்! யாகம் செய்து தேவர்களைப் பேணுங்கள்! நீங்கள் விரும்பும் சுகங்களை அவர்கள் தருவார்கள்! அவர்கள் கொடுத்ததை அவர்களுக்கு நிவேதனம் செய்யாமல் உண்பவன் திருடன். எனவே யாகத்தில் மிஞ்சியதை உண்ணும் நல்லவர்கள் பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர். ஆனால் தமக்கு மட்டுமே சமைத்துண்ணும் பாவிகள், பாவத்தையே உண்கிறார்கள்.”           

உணவிலிருந்து உயிர்கள் உண்டாகின்றன. மழையிலிருந்து உணவு உற்பத்தியாகிறது. மழை வேள்வியினால் உருவாகிறது. யாகம் மனிதனின் செயலால் உண்டானது. இந்தச் செயல் வேதத்தில் உதித்தது! வேதம் என்பது பிரம்மத்தில் தோன்றியது! எங்கும் நிறைந்த இந்தப் பிரம்மம், யாகத்தில் நிலைபெற்றுள்ளது. இந்தச் சங்கிலித்தொடர் சக்கர வட்டத்தைப் பின்பற்றாதவன் பாவியிலும் பாவியாவான்! ஆனால் ஆத்ம ஞானத்தில் திளைத்து திருப்தி அடைகிறவனுக்கு தொழில் செய்யும் கடமை இல்லை! அப்படிச் செய்தாலும் யாதொரு பயனுமில்லை! எவ்வுயிருடனும் அவனுக்கு உறவுமில்லை! ஆகவே பற்றைத் துறந்து பாங்குடன் பணிகளைச் செய்! இப்படிச் செய்பவன் பரம்பொருளை அடைவது மெய்! ஆம்.. ஜனகன் முதலானோர் கடமையைச் செய்தே முக்தியடைந்தார்கள். உனக்காக இல்லையென்றாலும் உலக நன்மைக்கான காரியத்தில் நீ ஈடுபட்டாக வேண்டும். ஏனெனில், தலைவன் செய்வதையே மற்றவர்கள் செய்கிறார்கள். அவன் நியாயம் என்பதையே மற்றவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். என்னைத்தான் எடுத்துக் கொள்ளேன். மூவுலகிலும் எனக்கு கடமைகள் இல்லை. இனி அடைய வேண்டிய உடமைகள் இல்லை. ஆனாலும் நான் விடாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறேன். ‘எனக்கென்ன!” என்று நான் எதுவுமே செய்யாமல் இருந்தால் என்ன ஆகும்? என்னைப் பின்பற்றி எல்லா மனிதர்களும் எதுவுமே செய்யாமல் சும்மாவே இருப்பார்கள். இதனால் உலகங்களெல்லாம் அழிந்து போகும். ஜாதிகளெல்லாம் கலந்து போகும்! மனித இனமே குலைந்து போகும்.

பரதகுமாரா! பாமர மக்கள் பொருளாசையில் தொழில் செய்கிறார்கள்! அறிவாளன் உலக நன்மைக்காக ஆசையற்றவனாய்த் தொழில் செய்ய வேண்டும். அப்பாவி மக்கள் உள்ளத்தில் அவன் தடுமாற்றத்தை உண்டாக்கக் கூடாது! அனைத்துத் தொழில்களிலும் அவன் ஈடுபட்டு, மற்றவர்களையும் ஈடுபடுத்த வேண்டும். இயற்கையின் உந்துதல் தான் உலகின் தொழில்களை இயக்குகிறது. ஆனால் ஆணவ மனிதனோ, ’நான் செய்தேன்! நான் செய்தேன்!” என்று குதிக்கிறான். உண்மை அறிஞன் தான் அது இயற்கையின் செயல் என்றுணர்ந்து ஆசையைத் துறக்கிறான். ஆசை மிகுதியால் தொழில் செய்யும் மந்த புத்திக்காரர்களை அறிஞன் குழப்பக்கூடாது. இந்த என் மதக் கோட்பாட்டைப் பின்பற்றுகிறவர்கள் வினைகளிலிருந்து விடுபடுவார்கள். பொறாமையால் இதைப் பின்பற்றாமல் இகழும் மூடர்கள் அழிந்து படுவார்கள்.   

அனைத்து உயிர்களுமே இயற்கையின் நியதிப்படியே இயங்குகின்றன. அறிஞனும் கூட தன் இயல்புப்படிதான் நடக்கிறான். அதைத் தடுப்பதில் பயனில்லை. அந்தந்தப் புலனுக்கு அந்தந்த நுகர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகள் இருக்கின்றன. இந்த விருப்பு வெறுப்புகள் கட்டுக்குள் இல்லையென்றால், அவையே அவனை அழிக்கும் எதிரிகள். மேலும் பிறனுக்குரிய தொழிலை நன்கு நுட்பத்துடன் செய்வதைக் காட்டிலும், தனக்குரிய தொழிலைத் தரங்குன்றவே செய்தாலும் கூட, அதுவே உயர்ந்தது. சுயதர்மத்தை நிறைவேற்றுவதில் ஒருவன் இறந்தாலும் அதுவே சிறந்தது. பரதர்மத்தைச் செய்வதோ மிகவும் ஆபத்தானது.
ஆகையால் அர்ஜுனா, நீ செய்யும் காரியத்தை எனக்கே அர்ப்பணித்து விடு! அது உன்னுடையது என்ற எண்ணத்தை நீக்கிவிடு! குழப்பங்கள் அனைத்தையும் போக்கிவிடு! பொங்கியெழுந்து போரிடப் புறப்படு!

அர்ஜுனன்:           விருஷ்ணிகுலக் கிருஷ்ணா! மனிதன், தான் விரும்பாவிட்டாலும், பலவந்தமாய் ஏவப்பட்டு, பாவப்பட்டச் செயல் செய்கின்றானே.. அது ஏன்?

கண்ணன்: காமமும் குரோதமும் தான் அதற்குக் காரணம். அது மயக்கத்தில் பிறக்கிறது. பெருந்தீனி தின்கிறது! அது தான் உனக்குப் பகை என்பதைத் தெரிந்து கொள்! நெருப்பைச் சூழ்ந்திருக்கும் புகையைப் போல், கண்ணாடியில் படிந்திருக்கும் கறையைப் போல், கருவை மூடியிருக்கும் கர்ப்பப் பையைப் போல் ஆசையானது ஞானத்தைச் சூழ்ந்திருக்கிறது. ஆசையே ஞானத்தின் நித்திய வைரி. அது காம வடிவம் கொண்டது. நிரப்பவே முடியாதது. புலன்களும், புத்தியும், மனமும் தான் இந்த ஆசையின் இருப்பிடம். இவை அறிவை மறைத்து மனிதனை மயங்க வைக்கின்றன.    

ஆகவே பரதகுலச் செல்வா, முதலில் நீ புலன்களை அடக்கிக் காமத்தை அழித்துவிடு! உடம்பைக் காட்டிலும் புலன்கள் உயர்ந்தவை தான். ஆனால் அவற்றிலும் மேலானது மனம்! அறிவோ மனத்தை விடச் சிறந்தது! அறிவை விட உயர்ந்தது ஆத்மா! இந்த ஆத்மாவை அறிந்து கொண்டு, ஆத்ம சக்தியால் உள்ளத்தைத் திறந்து கொண்டு, வெல்லற்கரிய காமம் எனும் பகையைக் கொன்றுவிடு! வென்றுவிடு!


(மூன்றாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment