Tuesday, 27 August 2013

16. தெய்வாசுர சம்பத் விபாக யோகம்


தெய்வாசுர சம்பத் விபாக யோகம்


தெய்வ குணங்களும் அசுர குணங்களும் என்று பொருள். தெய்வீக குணங்கள் யாவை... அசுர குணங்கள் யாவை என்பவை இதில் விளக்கப் பெற்றுள்ளன.

இதில் 24 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

--------------


அர்ஜுனன்: தாமரைக் கண்ணா! தெய்வ குணங்கள் யாவை?

கண்ணன்: அகத்தூய்மை, புறத்தூய்மை, அஞ்சாமை, ஆசையில்லாமை, ஆத்திரமில்லாமை, தற்பெருமையில்லாமை, வஞ்சகமில்லாமை, சபலமில்லாமை, பழிசொல்லாமை, சினங்கொள்ளாமை, செருக்கில்லாமை, தருக்கி நில்லாமை, வாய்மை, நேர்மை, வலிமை, பொறுமை, மென்மை, இனிமை, உறுதி, துணிவு, அடக்கம், இரக்கம், தியாகம், அகிம்சை, வெட்கம், புகழ், தயை, ஈகை, வேதம் ஓதுதல், வேள்வியைச் செய்தல், ஞானயோகத்தில் நிலையாய் நிற்றல் ஆகியவை தெய்வ சம்பத்துடன் பிறந்தவனுக்கு இயல்பான குணங்கள்.

அர்ஜுனன்: அப்படியானால் அசுர குணங்கள் யாவை?

கண்ணன்: பகட்டு, இறுமாப்பு, தற்பெருமை, கோபம், கடுஞ்சொல், அறியாமை ஆகியவை அசுர சம்பத்துடன் தோன்றியவனின் பிறவிக் குணங்கள்.

அர்ஜுனன்: அசுர குணத்துடன் பிறந்தவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள்?

கண்ணன்: அசுர குணத்துடன் பிறந்தவர்களுக்குச் சரி எது.. தவறு எது என்பதே தெரியாது. வாய்மையும் தூய்மையும் அவர்களிடம் இருக்காது! உண்மையே உலகில் இல்லை என்பார்கள்! தர்மமே இல்லை  என்று கதையளப்பார்கள்! இறைவனே  இல்லை என்று குதி குதிப்பார்கள். ஆண் பெண் உறவு தான் உலகின் அடித்தளம் என்று துணிந்துரைப்பார்கள். அவர்களின் பார்வை குறுகலானது. ஆத்ம குணமும் அருமை விவேகமும் அவர்களிடம் துளியும் இருக்காது. அடுத்துக் கெடுப்பார்கள்! அனைவருக்கும்  துன்பமே கொடுப்பார்கள். அடங்காத ஆசையுடன் ஆடம்பரமாய் நடிப்பார்கள்! ஆணவம் அகந்தையுடன் வெறி பிடித்துத் துடிப்பார்கள்! அநியாய வரும்படிக்குப் பாடுபடுவார்கள்! ஒழுக்கமற்ற வாழ்க்கையில் ஈடுபடுவார்கள். காம நுகர்ச்சிகளில் ஈடுபடுவதே இவர்களின் வாழ்க்கைக் குறிக்கோள். இவர்களைப் பிணைத்திருக்கும் ஆசைக் கயிறுகள் நூறு நூறு! காம சுகங்களில் ஊறு ஊறு! அதற்காகக் காசு பணங்களைச் சேரு சேரு! என்றவாறு தாறுமாறாய்த் துள்ளுவார்கள். உலகத்தை அழிவு நோக்கித் தள்ளுவார்கள்.

அர்ஜுனன்: அவர்கள் எப்படிப் பேசுவார்கள்?

கண்ணன்:  “இது என்னால் வந்தது! என் திறமையே தந்தது! இதோ.. என் ஆசை நிறைவேறுகிறது! அலை அலையாய்ப் பெருஞ்செல்வம் சேர்கின்றது! மலை மலையாய் இன்னும் அது குவியப் போகிறது!’ என்பான் ஒருவன்.

பகைவனைக் கொன்று விட்டேன்.. எதிரிப்படைகளை வென்று விட்டேன்! நானே கொற்றவன்! அனைத்தும் பெற்றவன்! வலிமையில் சிறந்தவன்! இன்பத்தில் மிதப்பவன்!”  என்பான் மற்றொருவன்.

நான் பணம்  படைத்தவன்! உயர் குலத்தில் பிறந்தவன்! எனக்கு நிகர் எவனுமே இல்லை! யாகங்கள் செய்வேன்.. தானங்கள் செய்வேன்.. மகிழ்ச்சிப் பெருக்கிலே நீந்தித் திளைப்பேன்!” என்பான் இன்னொருவன்.
இவர்கள் எல்லாம் அறியாமையில் கட்டுண்டவர்கள்! தறி கெட்ட எண்ணங்களால் மொத்துண்டவர்கள்! மோக வலை தன்னில் வசமாய்ச் சிக்குண்டவர்கள்! காமக்களியாட்டங்களில் ஈடுபட்டு ஆழ் நரகில் விழ்வதற்கென்றே தம்மை விற்றுக்கொண்டவர்கள்பணத்திமிர், குலத்திமிர், பிடிவாதம், தற்பெருமை ஆகியவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள்! சாத்திர முறை மீறி ஆடம்பரப் பகட்டுடன் யாகங்கள் செய்வதைப் பற்றிக் கொண்டவர்கள்! இதன் மூலம் பூரணத்துவமிழந்து மண்ணுலச் சுகமிழந்து விண்ணுலகப் பலனிழந்து பாவத்தைச் சுற்றிக் கொண்டவர்கள்! ஆணவம், பலம், காமம், குரோதம், இறுமாப்பு ஆகியவற்றை மேற்கொண்டு, அவர்கள் உள்ளிட்ட அனைவர் மேனியிலும் உறைபவனாகிய என்னை அவமதிக்கக் கற்றுக் கொண்டவர்கள்! இத்தகைய இழிகுணம் கொண்டவர்களைக் கடை நிலை கண்டவர்களை, அடிக்கடி நான் அசுரப் பிறவியிலேயே தள்ளுகிறேன். இந்த மூடப்பதர்கள் ஒவ்வொரு பிறவியிலும் என்னை அடைய முடியாமல் முன்னிலும் தாழ்ந்த நிலைக்கே தள்ளப் படுகிறார்கள்.

அர்ஜுனன்: அப்படியா கண்ணா?   

கண்ணன்: அஞ்சற்க பாண்டவா! நீ தெய்வ குணங்களுடன் பிறந்தவன்! தெய்வ குணங்கள் சொர்க்கத்தைக் கொடுக்கும், அசுர குணங்கள் பந்தப் படுத்தும்.

நரகத்திற்கு மூன்று வாயில்கள் உண்டு அர்ஜுனா! காமம், குரோதம், லோபம் என்பவைதான் அவை. தமோகுண வாயில்களான இம்மூன்றும் ஆத்மாவை அழிப்பவை! ஆகவே அவற்றை விலக்கி விட வேண்டும். இதன் மூலமாய்த் தான் ஒருவன் தனக்கே நன்மை செய்து கொள்கிறான்! நற்கதியடைகிறான்.

(பதினாறாம்  அத்தியாயம் நிறைவு பெற்றது)No comments:

Post a Comment