Tuesday, 27 August 2013

17. சித்ராத்ரய விபாக யோகம்


சித்ராத்ரய விபாக யோகம்சித்ராத்ரயம் என்றால் நம்பிக்கை என்று பொருள். சாத்விக, ராஜச, தாமச குணபேதங்களுக்கு ஏற்றபடி, நம்பிக்கையும் மூன்று வகைப்படும்.

இதில் 28 சுலோகங்கள் அடங்கியுள்ளன.

------------

அர்ஜுனன்:            ஒரு சந்தேகம் கண்ணா! சாத்திர முறை மீறி யாகம் செய்வது தவறு என்றாய். அவ்விதம் செய்பவன் உண்மையான நம்பிக்கையுடன் செய்கிறான் என்று வைத்துக் கொள். அவனுக்கு எந்த நிலை கிட்டும்? சத்துவ நிலையா? ரஜோ நிலையா? தமோ நிலையா?

கண்ணன்: ஆசையும் பற்றும் வலுத்தவர்களாய்.. அகங்காரமும் பகட்டும் கொண்டவர்களாய், சில அறிவிலிகள் தங்கள் உடலையும் அதற்குள் உறையும் என்னையும் வருத்திக் கொண்டு, சாத்திரத்திற்கு உட்படாத கொடுந்தவம் புரிகிறார்கள்! அவர்கள் அசுரகுணம் படைத்தவர்கள்.

அர்ஜுனா! இயல்பாகவே மனிதன் நம்பிக்கை மயமானவன். அந்த நம்பிக்கை சாத்விகி, ராஜசி, தாமசி என்று மூன்று வகைப்படும்! அவரவர் மனப்பாங்குக்கு ஏற்றபடிதான் இந்த நம்பிகைகள் அமைகின்றன. சாத்விக  நம்பிக்கை கொண்டவர்கள் தேவர்களை வணங்குகிறார்கள்! ராஜச நம்பிக்கை கொண்டவர்கள் அரக்கர்களை வழிபடுகிறார்கள். தாமச நம்பிக்கை கொண்டவர்கள் மூதாதயர்களையும் பூதகணங்களையும் வணங்குகிறார்கள்.      

இது போல் அனைவருக்கும் விருப்பமான உணவும் மூன்று வகைப்படும். அவற்றின் பேதா பேதங்களைப் பற்றிக் கூறுகிறேன் கேள்!

ஆயுள், அறிவு, வலிமை, ஆரோக்கியம், சுகம், இன்பம் இவற்றை வளர்ப்பவை, சாறுள்ளவை, பசைக் கூறுள்ளவை, மனதுக்கு இதம் அளிப்பவை போன்ற மதுர உணவுகள் சாத்விகர்களுக்கு விருப்பமானவை. கசப்பானது, புளிப்பானது, உவர்ப்பானது, மிதச்சூடானது, காய்ந்து போனது, காரம் மிகுந்தது, எரிச்சல் தருவது, பசி எடுக்காமல் தடுப்பது, துக்கம், துயரம், நோய் இவற்றைக் கொடுப்பது என்ற வகையான உணவுகள் ரஜோ குணத்தினருக்குப் பிடித்தது. நாளுற்றது, வற்றிச் சுவையற்றது, பழையது, எச்சிலானது, கெட்டுப்போனது, நாற்றமடிப்பது இந்த வகை உணவுகள் தாமச குணத்தார் விரும்பி உண்பது.                                                                                 

இது போல் யாகமும் மூன்று வகைப்படும். பலன் கருதாமல், “யாகம் செய்வது கடமைஎன்ற ஒரே எண்ணத்தில் சாத்திர முறைப்படி செய்யும் யாகம் சாத்விகமானது. பலன் கருதிப் பகட்டாய்ச் செய்யப்படும் யாகம் ராஜசமானது. அன்னதானம் செய்யாமலும், தட்சணை வைக்காமலும், மந்திரங்கள் ஓதாமலும், அக்கறை இல்லாமலும் வேதநெறி தவறி செய்யப்படும் யாகம் தாமசமானதாகும்.           

இது போல் தவமும் மூன்று வகைப்படும். மனம் தெளிந்திருத்தல், மௌனமாய் இருத்தல், மனத்தை அடக்குதல், சாதுவாய் இருத்தல், ஆத்மா ஒன்றையே சிந்தனையில் நிறுத்தல் என்ற மனத்தவமும்...  இனிமையாய்ப் பேசுதல், உண்மையே உரைத்தல், நயம்பட நன்மையே பகர்தல், வேதம் ஓதுதல் என்ற வாக்கு தவமும்.. தேவர், பிராமணர், ஆசாரியர் மற்றும் ஞானியரை வழிபடல், புனித நீராடல், அகிம்சை, நேர்மை, பிரம்மச்சரியம் மேற்கொள்ளல் என்ற சரீர தவம் என்ற மூன்றையும் பலன் கருதாமல் பக்தியுடனும் அக்கறையுடனும் செய்யும் போது, அது சாத்விக தவம் எனப்படும். பாராட்டும் பெருமையும் போற்றுதலும் பெறப் பகட்டாய்ச் செய்யப்படும் தவம் ராஜச தவம் எனப்படும். மற்றவர்களை அழிப்பதற்கென்றே உடம்பை வருத்திச் செய்யப்படும் மூடத்தனமான தவம் தாமசத் தவம் எனப்படும்.  

இது போல் தானங்களும் மூன்று வகைப்படும். தனக்கு எந்த உதவியும் செய்யாதவனுக்கு பலன் கருதாமல் காலம், இடம், நடத்தை அறிந்து கொடுப்பது சாத்விக தானம். கைமாறு கருதியும், பலன் எதிர் நோக்கியும், மனம் வருத்தியும் கொடுப்பது ராஜச தானம். தகாத நேரத்தில், தகாத இடத்தில் தகாதவர்களுக்கு மரியாதையின்றி அலட்சியமாய்ச் செய்யப்படும் தானம் தாமச தானம்.

அர்ஜுனன்:            அவ்விதமானால் கண்ணா.. இப்போது சொன்ன தானம், தவம், வேள்வி இம்மூன்றையும் எவ்விதம் தொடங்கவேண்டும்?

கண்ணன்: பரம்பொருளான பிரம்மத்திற்கு ஓம், தத், சத் என்று மூன்று பெயர்கள் உண்டு. இதைக் கொண்டுதான் முன்பு பிராமணர்களையும், வேதங்களையும், வேள்விகளையும் நான் தோற்றுவித்தேன். ஆகவே வேதம் அறிந்தவர்களால் வேத முறைப்படிச் செய்யப்படும் வேள்வி, தவம், தானம் ஆகிய மூன்றும் ஓம் என்று சொன்ன பிறகே தொடங்குகின்றன. பலன் கருதாமல் சொர்க்கத்தை நாடும் உத்தமர்கள் தத் என்று சொன்ன பிறகே அந்த முச்செயல்களிலும் ஈடுபடுகிறார்கள். நன்மை, உண்மை என்று இருபொருள் கொண்ட சத் என்ற சொல் எல்லா மங்கள நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. வேள்வி, தவம், தானம், இவற்றில் நிலைத்திருக்கும் சொல் சத் எனப்படும்! அது தொடர்பான மற்ற செயல்களும் கூட சத் என்றே சொல்லப்படும். அக்கறை இன்றி செய்யப்படும் வேள்வியும், தவமும், தானமும் அசத் எனப்படும். அது இக வாழ்விலும் உதவாது, பரலோகத்திலும் பயன்படாது.         (பதினேழாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment