Tuesday 27 August 2013

15. புருஷோத்தம யோகம்



புருஷோத்தம யோகம்




புருஷர்களில் உத்தமமானவன் என்பது பொருள். இயற்கை, ஆத்மா இரண்டையும் தன்வசப்படுத்திக் கொண்டு நிற்கும் இறைவன், அவற்றிலும் மேலானவர். அதனால் புருஷோத்தமன் எனும் பெயர் பெறுகிறான். சம்சாரம் என்பது அசுவத்த மரம் போன்றது! பற்றைத் துறப்பது என்ற வாளால் தான் அதை வெட்டிச் சாய்க்க முடியும்.

இதில் 20 சுலோகங்கள்அடங்கியுள்ளன.

----------------

கண்ணன்: சம்சாரம் என்ற அசுவத்த மரம், மேலே வேரும் கீழே கிளைகளும் கொண்டது, அது அழிவில்லாதது. வேதங்களே அதன் இலைகள். கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்றறியும் நலன்களின் செயல்களே அதன் தளிர்கள். சத்வம், ரஜஸ், தமஸ் என்ற முக்குணங்களால் செழித்து வளர்ந்த அதன் கிளைகள் கீழ்நோக்கிப் பரவியுள்ளன. மனித உலகில் பரவலாய்க் காணும் தொழிலின் தொகுப்புகள் தான் பல்கிப் பெருகும் அதன் வேர்கள். இவ்வாறு வேதங்களே கூறுகின்றன! இதை அறிந்தவனே வேதத்தை அறிந்தவன்.

ஆதியும் அந்தமும் இல்லாத இந்த அசுவத்த மரம் கண்ணுக்குத் தெரிவதில்லை. இதற்கு அடியுமில்லை.. முடிவுமில்லை.. இருப்புமில்லை. வேரூன்றிய இந்த அசுவத்த மரத்தைக் கூரூன்றிய பற்றிலாமை எனும் உறுதியான வாளால் வெட்டித் துணிந்திட வேண்டும்! பிறகு அடைந்தவர் திரும்பாத இனிய உலகைத் தேடத் துணித்திட வேண்டும்! முடிவில் அந்த மரத்தையே உண்டு பண்ணிய ஆதிபுருஷனை அடைந்து பணிந்திட வேண்டும். பற்றுதல் என்னும் குற்றத்தைப் போக்கி.. இன்ப துன்ப இரட்டைகளை நீக்கி.. கர்வம், மோகம், காமம் இவற்றை விலக்கி.. ஆத்மஞானத்தைத் துலக்கி ஆத்மாவின் உண்மை வடிவத்தை அறிந்தவர்கள் அந்த அழிவிலா இடத்தை அடைகின்றனர்! அந்த அற்புத இடத்தைச் சூரியனோ சந்திரனோ அல்லது பெருநெருப்போ பிரகாசிக்கச் செய்வதில்லை! அது தானாகவே பிரகாசிக்கிறது! அதுவே எனது பரமபதம்.

அநாதியான என்னுடைய அம்சங்களில் ஒன்றான ஆத்மாதான் உலகெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது. அதுவே உடம்பிலுள்ள மனம் முதலான ஆறு புலன்களுக்கும் தலைமை தாங்கி இங்குமங்கும் இழுத்துச் செல்லுகிறது. மலர்களின் மணத்தைக் காற்று எடுத்துச் செல்வதைப் போல், அந்த ஆத்மா உடல் எடுக்கும் போதும் அதை விடுக்கும் போதும் புலன்களைத் தன்னுடனே எடுத்துச் செல்கிறது. அது உடம்பிலுள்ள கண்ணால் பார்க்கிறது! காதால் கேட்கிறது! நாவால் சுவைக்கிறது! நாசியால் நுகர்கிறது! சதையால் உணர்கிறது! மனத்தால் நினைக்கிறது! அந்த ஆத்மா உடலை விடுவதையும் உடலில் படுவதையும், புலன்கள் மூலம் அனுபவிப்பதையும், குணங்களுடன் கூடி மிளிர்வதையும் மூடர்கள் அறிய மாட்டார்கள். ஞானக்கண் கொண்டவர்களே அறிவார்கள். அந்த ஞானிகள் ஆத்மாவைத் தங்களுக்குள்ளாகவே காண்பார்கள். மூடர்கள் எவ்வளவு தான் முயன்றாலும் அந்த ஆத்மாவைக் காண மாட்டார்கள்.

சூரியனின் ஒளியும், சந்திரனின் கிரணமும், நெருப்பின் ஜுவாலையும் என்னுடைய பிரகாசம் தான். நான் தான் சந்திரனாய் அமுத மழை பொழிந்து பயிர் பச்சைகளையெல்லாம் வளர்க்கிறேன்! என் பலத்தினால் பூமிக்குள் புகுந்து எல்லா உயிர்களையும் தாங்குகிறேன். மேலும்உயிருக்கு ஆதாரமான உள்மூச்சு, வெளிமூச்சு, ஆகியவற்றின் துணை கொண்டு, உதரக் கனலாய் மாறி, நான்கு வகை உணவுகளையும் ஜீரணிக்கிறேன். அனைவரது இதயங்களிலும் நிறைந்து, நான் தான் நினைக்கவும் செய்கிறேன்... மறக்கவும் செய்கிறேன். அறிவை ஆக்கவும் செய்கிறேன்.. பிறகு நீக்கவும் செய்கிறேன். வேதங்கள் விளக்கும் உட்பொருள் நான் தான்! வேதாந்தத்தைச் செய்தவனும் நான் தான்! முற்றும் அதை அறிந்தவனும் நான் தான்.

ஆத்மாவில் இரண்டு வகையுண்டு! ஒன்று நிலையற்றது. மற்றொன்று நிலையானது. எல்லா உயிர்களும் நிலையற்ற ஆத்மாவின் வடிவங்களே ஆகும்! வடிவத்தில் உறைவதே நிலையான ஆத்மாவாகும். இவை இரண்டையும் விட மேலான மற்றொரு ஆத்மா இருக்கிறது! அது அழிவற்ற ஈசனாய் மிளிர்ந்து, மூன்று உலகிலும் பரிணமித்து, அவற்றைத் தாங்குகிறது! அது தான் பரமாத்மா! அந்தப் பரமாத்மா நான் தான். அதனால் தான் புருஷோத்தமன் என்று எல்லோரும் என்னைப் போற்றுகிறார்கள். அப்படிப்பட்ட என்னை உள்ளபடி அறிந்தவன், எப்பொழுதும் என்னையே தொழுவான்.

குற்றமற்ற அர்ஜுனா! குவலயத்தில் இரகசியமான சாஸ்திரத்தை இது வரை உனக்குச் சொன்னேன்! இதை அறிந்தவனே அறிஞன்! அவனே செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டிய முறைப்படி செய்தவனாவான்.

(பதினைந்தாம் அத்தியாயம் நிறைவு பெற்றது)

No comments:

Post a Comment